வயநாடு நிலச்சரிவு: மாயமான 25 தமிழர்களின் நிலை என்ன?
வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 358-ஆக உயர்ந்துள்ளது.
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் வயநாடு பகுதியில் கடந்த 30-ம் தேதி அதிகாலை கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதன்காரணமாக, முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை, நூல்புழா பகுதிகள் முழுமையாக மண்ணில் புதைந்தன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேற்று 4-வது நாளாக மீட்பு பணி நடைபெற்றது.
பாதிக்கப்பட்ட இடங்களில் தெர்மல் ஸ்கேனரை பயன்படுத்தி, யாரேனும் உயிருடன் இருக்கிறார்களா என்றும் மீட்பு குழு தேடி வருகிறது. இதனிடையே, வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 358-ஆக உயர்ந்துள்ளது. மீட்பு பணி 5-வது நாளாக நீடித்து வருகிறது. ராணுவம்,தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் உள்ளிட்ட மீட்பு படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்
இதனிடையே, நிலச்சரிவில் சிக்கிய 25 தமிழர்களின் நிலை என்னவென்று தெரியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சூரல்மலை, முண்டக்கை, மேப்பாடி ஆகிய பகுதிகளில் இந்த தமிழர்கள் வசித்து வந்தனர். வயநாட்டிற்கு குடிபெயர்ந்தவர்களில் 22 பேரும் வயநாட்டிற்கு சென்ற 3 பேரும் என மொத்த 25 தமிழர்கள் மாயமாகியுள்ளனர்.
5 நாட்களாக பாறைகள்மேல் தஞ்சமடைந்துள்ள 3 பேரை மீட்கும் பணி தீவிரம்
வயநாடு மாவட்டத்தில் நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட முண்டக்கையில் இருந்து 6 கி.மீ. தொலைவில் வெள்ளரிமலை பகுதியில் சூஜிப்பாறை நீர்வீழ்ச்சி உள்ளது. வயநாடு நிலச்சரிவில் சிக்கி வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 3 பேர் சூஜிப்பாறையில் நீர்வீழ்ச்சியில் உள்ள பாறைகள் மேல் தஞ்சமடைந்துள்ளனர். கடந்த 5 நாட்களாக தண்ணீரை மட்டும் குடித்து 3 பேரும் உயிர் வாழ்ந்துள்ளனர். தற்போது மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வரும் நிலையில் பாறைகளின் மேல் தஞ்சமடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 3 பேரையும் மீட்புக்குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.
பாறைகளில் சிக்கியுள்ள 3 பேரையும் மீட்பதற்கான வாய்ப்புகள் குறித்து இந்திய ராணுவத்தினர் திட்டமிட்டு வருகின்றனர். 3 பேரும் விரைவில் மீட்கப்படுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் மோகன்லால் ரூ. 3 கோடி நிதி உதவி
வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் நடிகர் மோகன்லால் ரூ. 3 கோடி நிதி உதவி வழங்கினார். மேலும், முண்டக்கையில் சேதமடைந்த பள்ளிக்கூடத்தை சொந்த நிதியில் கட்டித்தருவதாகவும் மோகன்லால் உறுதியளித்துள்ளார்.
வயநாடு நிலச்சரிவில் மீட்கப்பட்ட 10,042 பேர் 93 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சலியாறு ஆற்றங்கரையை ஒட்டிய பகுதிகளில் தொடர்ந்து தேடுதல் பணி நடைபெற்று வருகிறது. நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 67 பேரின் உடல்களை இதுவரை அடையாளம் காணப்படவில்லை. வயநாடு நிலச்சரிவு மீட்பு பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது: கேரள முதல் மந்திரி பினராயி விஜயன்
வயநாடு மாவட்டத்தில் கோட்டப்படி, வெள்ளர்மலை , திருக்கை பற்றா ஆகிய 3 கிராமங்களை, முழுமையான இயற்கை சீற்றம் பாதித்த பகுதிகளாக கேரள மாநில அரசு அறிவித்துள்ளது. இதன்படி இயற்கை சீற்ற நிவாரண நிதியுதவி சட்டப்படி இங்கு வசிக்கும் மக்களுக்கும் மற்றும் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கும் அனைத்து உதவிகளும் விரைவில் கிடைக்க இந்த அறிவிப்பு வழி வகுக்கும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது
வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நடிகர் மோகன்லால் ஆறுதல் கூறினார். ராணுவத்தில் கவுரவ லெப்டினன்ட் கர்னல் பதவியை வகிக்கும் மோகன்லால் ராணுவ சீருடையில் சென்று ஆறுதல் கூறினார். தொடர்ந்து ராணுவ வீரர்களுடன் மேப்பாடி பகுதிக்கு சென்றுள்ளார்.
நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் இன்னும் 200-பேரை கண்டறிய முடியவில்லை. மலைப்பகுதிகளில் மீட்பு பணியில் ஈடுபடுவதில் திறன் வாய்ந்த தனியார் நிறுவனங்களும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளன. இந்திய ராணுவம் தலைமையிலான மீட்புக் குழுவில் கேரள போலீசார் மற்றும் அவசர சேவைகள் குழுவினரும் ஈடுபட்டு இருக்கிறார்கள். அதி நவீன ரேடார்களை கொண்டு இந்த பணி நடைபெற்று வருகிறது.
வயநாடு நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி 5-வது நாளாக நடைபெறுகிறது. ரேடார் மற்றும் மோப்ப நாய்கள் உதவியுடன் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.