வயநாடு நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 296 - ஆக உயர்வு- 3 வது நாளாக தொடரும் மீட்பு பணி
வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.;
வயநாடு,
கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய மலைக்கிராமங்களில் நேற்று முன்தினம் அதிகாலையில் அடுத்தடுத்து பயங்கர நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதில் ஏராளமான மக்கள் மண்ணில் உயிரோடு புதைந்தனர். சிலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.
நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. ராணுவம், விமானப்படை, கடற்படையினர், தேசிய பேரிடர் மீட்பு படையினர், மாநில பேரிடர் மீட்பு படையினர், போலீசார், தீயணைப்பு வீரர்கள் முழு வீச்சில் போராடி வருகின்றனர். காயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளில் அனுமதித்து வருகின்றனர்.
இந்த நிலையில், வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 296-ஆக உயர்ந்துள்ளது. நிலச்சரிவில் சிக்கியவர்களில் 1,500-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அனைத்து இடங்களிலும் சேறும், சகதியும் நிறைந்து இருப்பதால், மீட்பு பணியில் பெரும் சவால் இருந்து வருகிறது. மீட்பு பணிகள் தொடர்ந்து 3-வது நாளாக நடைபெற்று வருகிறது. பலர் மாயமாகி உள்ள நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிரிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
முண்டக்கை பகுதியில் மீட்புப் பணிகளில் ஈடுபடுவதற்காக, நதியின் குறுக்கே தற்காலிக பாலம் அமைக்கும் பணி நிறைவு பெற உள்ளது. சூரல்மலையில் நடைபெற்ற மீட்புப் பணிகள் கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ள நிலையில், அடுத்ததாக முண்டக்கை பகுதியில் மீட்புப் பணிகள் தீவிரமடைய உள்ளன.
வயநாட்டில் முண்டக்கை கிராமத்தில் மற்றும் சூரல்மலா கிராமத்தின் சில பகுதிகளில் நிலச்சரிவால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. 2 பள்ளிகளை சேர்ந்த 27 மாணவர்கள் பலியானார்கள்.
வயநாட்டின் சூரல்மலா பகுதியில் 140 ராணுவ வீரர்கள் சேர்ந்து 31 மணிநேரத்தில் 190 அடி நீளத்திற்கு பெய்லி பாலம் அமைத்துள்ளனர்.
வயநாடு நிலச்சரிவு தொடர்பாக 4 பேர் கொண்ட அமைச்சர்கள் குழுவை நியமித்து கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார். நிலச்சரிவு சம்பவத்தில் மீட்பு, மறுவாழ்வு முயற்சிகளை மேற்பார்வையிட குழு அமைக்கப்பட்டுள்ளது. கேரளா மந்திரிகள் கே.ராஜன், ஏ.கே.சசீந்தரன், முகமது ரியாஸ், ஒ.ஆர்.கேலு குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
கனமழை தொடர்வதால் வயநாடு மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து அம்மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
வயநாடு நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் 3 நாட்களுக்கு இலவச சேவை வழங்கப்படும் என ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பயனர்களுக்கு ஏர்டெல் நிறுவனம் இலவச மொபைல் டேட்டா மற்றும் பிற சேவைகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது ப்ரீபெய்டு வாடிக்கையாளர்கள் ஒருநாளைக்கு 1ஜிபி இலவச டேட்டா, ஒருநாளைக்கு 100 எஸ்.எம்.எஸ். இலவசம். மேலும், ஏர்டெல் போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களைப் பொறுத்தவரை, வயநாடு வாடிக்கையாளர்களுக்கான பில் செலுத்தும் காலக்கெடு கூடுதலாக 30 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கட்டணம் செலுத்தாவிட்டாலும், அடுத்த ஒரு மாதத்திற்கு சேவைகளை பயன்படுத்தலாம். 2 மாதங்களுக்கான கட்டணத்தையும் அடுத்த மாதம் செலுத்தினால் போதும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறிய பின் ராகுல்காந்தி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
இது வயநாட்டிற்கும், கேரளாவிற்கும் மற்றும் தேசத்திற்கும் ஏற்பட்ட பயங்கரமான ஒரு சோகம். நிலைமையை குறித்து ஆய்வு செய்ய வந்தோம். எத்தனை பேர் குடும்ப உறுப்பினர்களையும், வீடுகளையும் இழந்துள்ளனர் என்பது வேதனை அளிக்கிறது. என்னை பொறுத்தவரை நிச்சயமாக இது ஒரு தேசிய பேரிடர்தான். அரசு என்ன சொல்கிறது என்று பார்ப்போம். நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், நிர்வாகம் மற்றும் தன்னார்வ தொண்டர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதனை தொடர்ந்து பிரியங்கா காந்தி கூறியதாவது: கேரளா வயநாட்டில் நிலச்சரிவால் பாதித்த மக்களுக்கு நாட்டு மக்கள் அனைவரும் உதவ வேண்டும். நிலச்சரிவு பாதிப்பால் பலரும் தங்களது குடும்பங்களை இழந்துள்ளனர் என்றார்.
நாட்டையே உலுக்கிய வயநாடு நிலச்சரிவு.. செயற்கைக்கோள் புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. வயநாடு நிலச்சரிவுக்கு முன்.. பின்.. என புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவால் 86,000 சதுர மீட்டர் பரப்பு நிலம் சரிந்து சேறாகி போன படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. கார்ட்டோசாட்-3 என்ற இஸ்ரோவின் தொலை உணர்வு செயற்கைக்கோள் மூலம் வயநாடு சேதங்கள் படம் பிடிக்கப்பட்டுள்ளன. முண்டகையில் தொடங்கி இருவைப்புழா ஆறு வரை சுமார் 8.கி.மீ தூரத்துக்கு நிலம் சரிந்து மழை, வெள்ளத்தோடு கலந்து ஓடிய தடத்தின் படமும் வெளியிடப்பட்டுள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 1,550 மீட்டர் உயர்த்தில் நிலச்சரிவு ஏற்பட்டிருப்பதையும் துல்லியமாக எடுத்துகாட்டுகிறது இஸ்ரோ புகைப்படம்.
நிலச்சரிவு துல்லியமாக எந்த இடத்தில் தொடங்கி எதுவரை சென்றுள்ளது என்பதையும் இஸ்ரோவின் செயற்கைக்கோள் படம் தெளிவாக காட்டுகிறது. வயநாட்டில் ஏற்கனவே ஏற்பட்ட நிலச்சரிவு தொடர்பான செயற்கைக்கோள் புகைப்படத்தையும் இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
கேரளா வயநாடு சூரல்மலைப்பகுதியில் மழை பெய்வதால் மீட்புப்பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மழைக்கு மத்தியில் மீட்பு நடவடிக்கைகளை மீட்புக்குழுவினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
வயநாட்டின் சோகக் காட்சிகளைக் காணும் போது என் மனம் மிகவும் வலிக்கிறது என ராகுல் காந்தி கூறியுள்ளார்.