சலவைத்தொழிலாளி மகளின் கல்விக்கு கிடைத்த வெகுமதி
தீபாளியின் தந்தை, வீட்டில் படுத்த படுக்கையாக உள்ளார்.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவி தீபாளி கனோஜ்யா அமெரிக்க வெளியுறவுத் துறை நிதியுதவியுடன் அந்நாட்டில் மேற்படிப்பை படிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். ஆகஸ்ட் 19 அன்று தீபாளி அமெரிக்காவிற்கு செல்லவுள்ளார்.
சலவை தொழிலாளியான தீபாளியின் தந்தை, அவரது கால் அறுவை சிகிச்சைக்கு பிறகு படுத்த படுக்கையாக வீட்டில் உள்ளார். தனது தந்தை படுத்த படுக்கையாக இருக்கும் நிலையில் வீட்டில் டியூஷன் நடத்தி தீபாளி தாய்க்கு உதவி வந்துள்ளார்.
ஒதுக்கப்பட்ட சமூகம் மற்றும் நலிந்த பொருளாதார பின்னணியை சேர்ந்த பெண்களுக்கு கல்வி வழங்கும் ஸ்டடி ஹால் கல்வி அறக்கட்டளையின் ஒரு பிரிவான பிரேர்னா பெண்கள் பள்ளியில் தீபாளி சேர்ந்து படித்து வந்தார்.
இது தொடர்பாக பேசிய தீபாளி,
இந்தியாவில் இருந்து இதற்கு தேர்வான 30 மாணவர்களில், நானும் ஒருவர் என்பதை நினைக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. எனது ஆசிரியர்களிடமிருந்து அமெரிக்காவை பற்றி நான் தெரிந்து கொண்டேன். ஆனால் நான் எனது படிப்புக்காக அமெரிக்கா செல்வேன் என்று நினைத்து கூட பார்க்கவில்லை. இது எனக்கு கிடைத்துள்ள சிறந்த வாய்ப்பு" என்று தெரிவித்தார்.
இது தொடர்பாக பேசிய தீபாளியின் தாயார். "என் மகளை அமெரிக்காவிற்கு அனுப்புவதற்கு சற்று பதட்டமாக இருந்தாலும், நான் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருக்கிறேன்" என்று தெரிவித்தார். சலவைத்தொழிலாளி மகளின் கல்விக்கு கிடைத்த வெகுமதி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.