ஆம்புலன்சில் நோயாளியின் மனைவியிடம் அத்துமீறிய ஊழியர்கள்... கத்தி கூச்சலிட்டதால் அடுத்து நடந்த கொடூரம்

ஆம்புலன்சில் நோயாளியின் மனைவியை ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.;

Update:2024-09-05 19:07 IST

கோப்புப்படம் 

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் சித்தார்த்நகர் மாவட்டத்தில் நோயாளியின் மனைவியை ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுதியுள்ளது.

கடந்த மாதம் 30-ந்தேதி பெண் ஒருவர் தனது கணவருக்கு உடல்நலம் சரியில்லாமல் இருந்ததால் அருகில் உள்ள பஸ்தி மருத்துவ கல்லூரிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அவரது உடல்நிலை மோசமடைந்ததையடுத்து மருத்துவர்கள் தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு அழைத்துச் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். கட்டணம் செலுத்த வசதியில்லாததால் அந்த பெண் தனது கணவரை வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

இதற்காக ஆம்புலன்சில் சென்றபோது, அந்த பெண்ணை ஆம்புலன்ஸ் டிரைவர் முன்பக்கம் தனக்கு அருகில் உட்கார வைத்துள்ளார். அப்போது டிரைவர், உதவியாளருடன் சேர்ந்து அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அவர்களின் ஆசைக்கு அடிபணியாத அந்த பெண், கத்தி கூச்சலிட்டு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர்கள் அந்த பெண்ணின் கணவருக்கு வழங்கப்பட்டிருந்த ஆக்சிஜன் சப்ளையை துண்டித்துவிட்டு, இருவரையும் ஆம்புலன்சில் இருந்து இறக்கி விட்டுள்ளனர்.

ஆக்ஸிஜன் சப்ளை துண்டிக்கப்பட்டதால் அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதையடுத்து அந்த பெண் தனது சகோதரரை செல்போனில் தொடர்பு கொண்டு, தனக்கு நேர்ந்த கொடுமையை கூறியுள்ளார். அந்த பெண்ணின் சகோதரர், இதுகுறித்து போலீசுக்கு தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அவர் கணவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து லக்னோவின் காஜிபூர் காவல் நிலையத்தில் அந்த பெண் புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் அவரது உதவியாளரை கைது செய்ய போலீசார் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று லக்னோ வடக்கு கூடுதல் டி.ஜி.பி. ஜிதேந்திர துபே தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்