யூனியன் கார்பைடு கழிவுகளை அழிக்கும் நடைமுறைக்கு எதிர்ப்பு- 2 பேர் தீக்குளித்தனர்
கார்பைடு கழிவுகளை அழிப்பதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் எனக் கூறி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.;
தார்:
மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் உள்ள யூனியன் கார்பைடு தொழிற்சாலையில், 40 ஆண்டுகளுக்கு முன் விஷ வாயு கசிவு ஏற்பட்டது. 1984-ம் ஆண்டு டிசம்பர் 2 மற்றும் 3 ஆகிய நாட்களுக்கு இடைப்பட்ட இரவில் மெத்தில் ஐசோ சயனேட் என்ற வாயு கசிந்ததில் 5,479 பேர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில், யூனியன் கார்பைடு ஆலையில் அகற்றப்படாமல் இருந்த கழிவுகளை வெளியேற்றி அழிக்கும்படி கோர்ட் உத்தரவிட்டு 4 வார கால அவகாசம் அளித்தது. இதையடுத்து தார் மாவட்டத்தில் உள்ள பீதாம்பூர் தொழிற்பேட்டை பகுதிக்கு கழிவுகளை கொண்டு சென்று பாதுகாப்பாக அழிக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, 377 டன் கழிவுகள் 12 கண்டெய்னர்களில் ஏற்றப்பட்டு பீதாம்பூர் தொழிற்பேட்டைக்கு கொண்டு வரப்பட்டன.
அங்கு கழிவுகளை அழிப்பதால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் எனக் கூறி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பீதாம்பூர் பச்சாவோ சமிதி சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டமும் நடைபெற்றது. பீதாம்பூரின் பெரும்பாலான பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
போராட்டத்தின்போது 2 நபர்கள் திடீரென தீக்குளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தீக்காயமடைந்த அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்தூரில் இருந்து சுமார் 30 கிமீ தொலைவில் உள்ள பீதாம்பூரில் 1.75 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். பீதாம்பூர் தொழிற்பேட்டையில் 700 தொழிற்சாலைகள் உள்ளன. இப்பகுதியில் கார்பைடு கழிவுகளை எரிப்பதால் உள்ளூர் மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படும் என பீதாம்பூர் பச்சாவோ சமிதி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.