2024-ல் திருப்பதி கோவிலில் ரூ.1,365 கோடி உண்டியல் காணிக்கை வசூல்
பக்தர்கள் ரூ.1,365 கோடி உண்டியல் காணிக்கை செலுத்தியதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.;
திருப்பதி,
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாடு முழுவதும் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். குறிப்பாக விசேஷ நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில் திருப்பதி கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்து காணப்படும்.
அவ்வாறு கோவிலுக்கு வரும் பக்தர்கள் திருப்பதியில் உண்டியல் காணிக்கையாக பணம், நகை, ஆபரணங்கள் உள்ளிட்டவற்றை செலுத்துகின்றனர். இந்நிலையில், 2024-ம் ஆண்டில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை விவரங்களை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, 2024 ஜனவரி மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை, பக்தர்கள் மொத்தம் 1,365 கோடி ரூபாய் உண்டியல் காணிக்கை செலுத்தியதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. 2024-ல் திருப்பதி ஏழுமலையானை தரிசித்த பக்தர்களின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 55 லட்சம் என்றும், தலை முடி காணிக்கை செலுத்திய பக்தர்களின் எண்ணிக்கை 99 லட்சம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, 2024-ல் திருப்பதியில் லட்டு விற்பனை எண்ணிக்கை 12 கோடியே 14 லட்சம் என தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.