ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்; மறு ஆய்வு மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம்கோர்ட்டு

வேதாந்தா குழுமம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனுவை சுப்ரீம்கோர்ட்டு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Update: 2024-11-12 01:30 GMT

புதுடெல்லி,

தூத்துக்குடியில் வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலையால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக கூறி கடந்த 2018-ம் ஆண்டு அப்பகுதியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 100-வது நாள் போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறை காரணமாக போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதைத்தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலையை பூட்டி தமிழக அரசு சீல் வைத்தது.

இதனையடுத்து, ஸ்டெர்லைட் மீதான தடை உத்தரவை நீக்கி மீண்டும் திறக்க வேண்டும் என வேதாந்தா நிறுவனம் சார்பாக சுப்ரீம்கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பான இறுதி விசாரணை சுப்ரீம்கோர்ட்டின் அப்போதைய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வில் நடைபெற்றது. இதனையடுத்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதி மறுத்த சென்னை ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சுப்ரீம்கோர்ட்டு கடந்த பிப்ரவரி மாதம் (29.02.2024) தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது.

இந்தசூழலில், ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க அனுமதிக்க முடியாது என்ற நீதிமன்றத்தின் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி வேதாந்தா குழுமத்தின் சார்பில் சுப்ரீம்கோர்ட்டில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக் கோரி வேதாந்தா குழுமத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவைத் தள்ளுபடி செய்து சுப்ரீம்கோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. தீர்ப்பை சீராய்வு செய்ய எந்த முகாந்திரமும் இல்லை என்று கூறி வேதாந்தா குழுமத்தின் மறு ஆய்வு மனுவை சுப்ரீம்கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

Tags:    

மேலும் செய்திகள்