ஷேக் ஹசீனா ராஜினாமா: வங்காளதேச நாடாளுமன்றம் கலைப்பு
வங்காளதேச நாட்டில் இருந்து தப்பிய ஷேக் ஹசீனா, தற்போதைக்கு இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.;
புதுடெல்லி,
வங்காளதேசத்தில் ஏற்பட்ட நெருக்கடியை தொடர்ந்து அந்நாட்டு பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, நாட்டை விட்டு வெளியேறினார். இந்தியாவுக்கு வந்த ஷேக் ஹசீனா, இங்கிலாந்து செல்ல முடிவு செய்துள்ளார். இதற்காக அந்த நாட்டிடம் அடைக்கலம் கோரியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்தில் அடைக்கலம் புகுவதற்கான அனுமதி கிடைக்கும் வரை ஷேக் ஹசீனா, இந்தியாவிலேயே தங்கியிருப்பார் என சொல்லப்படுகிறது. இதனால், ஷேக் ஹசீனா விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து இந்தியாவும் உயர் மட்ட ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.
வங்காள தேசத்தில் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் மிகவும் கவலை அளிக்கின்றன என அந்நாட்டில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய தூதர்கள் தெரிவித்துள்ளனர்.
வங்காள தேசத்தில் சிறுபான்மையினர் குறிவைத்து தாக்கப்படுவதற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. வங்காள தேசத்தில் மேற்கொள்ளப்படும் ஜனநாயக நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்போம் என கூறியுள்ளது.
வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா அரசில் வெளியுறவு மந்திரியாக இருந்த ஹசன் முகமது கைது செய்யப்பட்டு உள்ளார்.
வங்காளதேசத்தில் போராட்டக்காரர்களின் அழுத்தத்திற்கு பணிந்து பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டு வெளியேறிய பிறகும், வன்முறை ஓயவில்லை. ஜோசோர் மாவட்டத்தில் அவாமி லீக் கட்சியின் முக்கிய நிர்வாகி ஒருவருக்கு சொந்தமான நட்சத்திர ஓட்டலுக்கு நேற்று இரவு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இதில், 24 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
வங்காள தேசத்தின் முன்னாள் மந்திரியும் அவாமி லீக் தலைவருமான ஜுனைத் அகமது வெளிநாடு செல்வதற்காக டாக்கா விமான நிலையத்தில் காத்திருந்தபோது ராணுவம் அவரை கைது செய்தது.
வங்காளதேசத்தில் 19,000 இந்தியர்கள் இருக்கிறார்கள்- ஜெய்சங்கர்
வங்காளதேச நிலவரம் மற்றும் அங்குள்ள இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இன்று மக்களவையில் விளக்கம் அளித்தார். அவர் பேசியதாவது:-
நமது தூதரகங்கள் மூலம் வங்காளதேசத்தில் உள்ள இந்திய சமூகத்தினருடன் தொடர்பில் இருக்கிறோம். அங்கு 9000 மாணவர்கள் உள்ளிட்ட 19,000 இந்தியர்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.
வங்காளதேசத்தில் உள்ள சிறுபான்மையினரின் நிலைமையை கண்காணித்து வருகிறோம். வங்காளதேச அதிகாரிகளுடனும் தொடர்பு கொண்டு பேசி வருகிறோம். இந்த சிக்கலான சூழ்நிலையில், எச்சரிக்கையாக இருக்குமாறு நமது எல்லைப் பாதுகாப்புப் படைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
வங்காளதேச முன்னாள் பிரதமர் பேகம் கலிதா ஜியா வீட்டு காவலில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை அந்நாட்டு அதிபர் பிறப்பித்து உள்ளார். ஜூலை 1 முதல் ஆகஸ்டு 5 வரை கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் அதிபர் விடுதலை செய்து உள்ளார்.
வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா தன்னுடைய பதவியை ராஜினாமா செய்த நிலையில், வங்காளதேச நாடாளுமன்றம் இன்று கலைக்கப்பட்டு உள்ளது.
வங்காளதேச ராணுவத்துடன் மத்திய அரசு தொடர்பில் இருப்பதாகவும் அங்குள்ள சூழலை இந்தியா உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் அனைத்துக் கட்சி கூட்டத்தில் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
வங்காளதேச விவகாரம் தொடர்பாக இன்று பிற்பகல் 3.30 மணிக்கு மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளார்.