டெல்லியில் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

டெல்லியில் தனியார் பள்ளிக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-12-20 07:08 GMT

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் உள்ள பள்ளிகளுக்கு சமீப நாட்களாக வெடிகுண்டு மிரட்டல் அதிகம் வந்துகொண்டிருக்கிறது. அந்த வகையில் இன்று டெல்லியில் பல்வேறு பள்ளிகளுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது இந்த வாரத்தின் 3வது வெடிகுண்டு மிரட்டல் சம்பவமாகும். இதன்படி, டெல்லியில் கடந்த 11 நாட்களில் 6 முறை பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

வெடிகுண்டு மிரட்டல் வந்த பள்ளிகளில் பாதுகாப்புப் பணியாளர்கள் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். ஆனால் சந்தேகத்திற்கிடமான பொருள் எதுவும் கிடைக்கவில்லை என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதுதொடர்பாக டெல்லி தீயணைப்புத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக காலை 5.02 மணிக்கு எங்களுக்கு அழைப்பு வந்தது. இதையடுத்து, தீயணைப்புத் துறை, உள்ளூர் போலீஸார், நாய்ப் படைகள் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் குழுக்கள் பள்ளிக்கு வந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமான பொருள் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் அந்த பள்ளியில் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கை நடைபெற்று வருகிறது என்றார்.

மேலும் துவாரகாவில் உள்ள 5 பள்ளிகளுக்கும், மற்ற மாவட்டங்களில் உள்ள சில பள்ளிகளுக்கும் இதே போன்ற இ-மெயில் மூலம் மிரட்டல் வந்ததாக தீயணைப்புத்துறை அதிகாரி கூறினார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து இ-மெயில் அனுப்பிய நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்