ஜீவனாம்ச வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு

திருமணத்தை வணிகமாக மாற்றி, பெண்கள் பணம் பறிக்கக்கூடாது என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.

Update: 2024-12-20 11:52 GMT

புதுடெல்லி,

மத்திய பிரதேச மாநிலம் போபாலை சேர்ந்த தொழிலதிபரின் இரண்டாவது மனைவி ஜீவனாம்சம் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் முதல் மனைவிக்கு ரூ.500 கோடி ஜீவனாம்சம் வழங்கியதாகவும் எனக்கு வெறும் 8 கோடி ஜீவனாம்சம் வழங்கியதாக அதில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அந்த மனு மீதான விசாரணை இன்று முடிவடைந்து தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பில், பிரிந்து சென்ற கணவருக்கு எதிராக அவரது முன்னாள் மனைவி தொடர்ந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்து உத்தரவிட்டது.

இந்த வழக்கு தொடர்பாக நீதிபதி கூறுகையில், பெண்களின் நலனுக்கான விதிகளை தங்கள் கணவர்களை அச்சுறுத்தவோ, மிரட்டி பணம் பறிக்கவோ பயன்படுத்தக் கூடாது. சிலர் கணவரின் வயதான பெற்றோர், தாத்தா பாட்டிகளைக்கூட கைது செய்ய வைக்கிறார்கள் அது கண்டிக்கத்தக்கது என்றார்.

மேலும், சில துரதிர்ஷ்டவசமான நிகழ்வுகளின் காரணமாக, விவாகரத்திற்கு பிறகு கணவர் ஏழையாக மாறினால், மனைவி தனது செல்வத்தை பகிர்ந்து கொள்ள விரும்புவாரா என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். மேலும், ஜீவனாம்சம் நிர்ணயம் செய்வது பல்வேறு காரணிகளைப் பொறுத்தது, நேரடியாக எடுத்துக் கொடுக்க முடியாது என கூறினார்.

சமீபத்தில், பெங்களூரு ஐடி ஊழியர் தனது மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் ஜீவனாம்சம் கேட்டு பல்வேறு பொய் வழக்குகளை போட்டதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்