கிளர்ச்சி தொடர்பான வங்காளதேச அரசு அதிகாரியின் கருத்து - இந்தியா கண்டனம்

கிளர்ச்சி தொடர்பான வங்காளதேச அரசு அதிகாரியின் கருத்துக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

Update: 2024-12-20 12:47 GMT

புதுடெல்லி,

வங்களாதேசத்தில் நடந்த மாணவர்கள் போராட்டம் வன்முறையாக மாறியதை தொடர்ந்து, அந்த நாட்டின் பிரதமராக பதவி வகித்து வந்த ஷேக் ஹசினா, தனது பதவியை ராஜினாமா செய்தார். அதனை தொடர்ந்து வங்காளதேசத்தில் அமைந்த இடைக்கால அரசாங்கத்தின் பிரதமராக முகமது யூனுஸ் பதவியேற்றார்.

இதனிடையே இடைக்கால அரசு அமைந்த பிறகு வங்காளதேசத்தில் உள்ள சிறுபான்மையினர் மீது தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த தாக்குதல்களை வங்காளதேச இடைக்கால அரசு தடுக்க வேண்டும் என இந்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இந்த சூழலில், அண்மையில் வங்காளதேச இடைக்கால அரசின் மூத்த அதிகாரியான மபுஜ் ஆலம் என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை பதவி விலக வைத்த கிளர்ச்சியை இந்திய அரசு அங்கீகரிக்க வேண்டும்" என்று பதிவிட்டிருந்தார். தற்போது இந்த பதிவு அவரது பேஸ்புக் பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், அவரது கருத்துக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் செய்தியாளர்களிடம் கூறுகையில், "இந்த விவகாரத்தில் வங்காளதேசத்திற்கு இந்தியா தரப்பில் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளோம். சம்பந்தப்பட்ட பதிவு நீக்கப்பட்டதாக கூறப்பட்டதை நாங்கள் புரிந்துகொள்கிறோம்.

தங்கள் பொதுக் கருத்துகளை கவனமாக வெளியிடுமாறு சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நினைவூட்ட விரும்புகிறோம். வங்காளதேசத்தின் மக்களுடனும், இடைக்கால அரசாங்கத்துடனும் உறவுகளை வளர்ப்பதில் இந்தியா தொடர்ந்து ஆர்வம் காட்டினாலும், இதுபோன்ற கருத்துகள் பொது பொறுப்புணர்ச்சியின் அவசியத்தை உணர்த்துகிறது" என்று தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்