'ஜாமீன் கிடைத்தவுடன் செந்தில் பாலாஜியை அமைச்சராக நியமித்தது தவறு' - சுப்ரீம் கோர்ட்டு

ஜாமீன் கிடைத்தவுடன் செந்தில் பாலாஜியை அமைச்சராக நியமித்தது தவறு என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.

Update: 2024-12-20 13:17 GMT

சென்னை,

தமிழ்நாடு போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக பணம் பெற்று மோசடி செய்ததாக அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு (2023) ஜூன் மாதம் 14-ந்தேதி கைது செய்யப்பட்டார். இதையடுத்து ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை ஏற்று பல்வேறு நிபந்தனைகளுடன் செந்தில் பாலாஜிக்கு சுப்ரீம் கோர்ட்டு ஜாமீன் வழங்கியது.

இதனிடையே, செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கியதை மறு ஆய்வு செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில், பாலாஜி சீனிவாசன் என்பவர் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி அபய் ஓகா, நீதிபதி ஏ.ஜி.மாசி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜாமீன் கிடைத்தவுடன் செந்தில் பாலாஜியை அமைச்சராக நியமித்தது மோசமான தவறு என நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும் இந்த பணமோசடி வழக்கில் எத்தனை சாட்சிகள் உள்ளனர் என்ற விவரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், சாட்சிகளில் மொத்தம் எத்தனை அரசு ஊழியர்கள் உள்ளனர்? எத்தனை சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது? செந்தில் பாலாஜி மீது நிலுவையில் உள்ள வழக்குகள் உள்ளிட்ட விவரங்களையும் தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர். தொடர்ந்து இந்த வழக்கின் விசாரணையை வரும் ஜனவரி 15-ந்தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்