ரூ.5 கோடி கேட்டு சல்மான் கானுக்கு மிரட்டல் விடுத்தவர் மன்னிப்பு கோரினார்
சல்மான் கான் ரூ.5 கோடி தர வேண்டும் என்று மிரட்டல் விடுத்த நபர், தற்போது மன்னிப்பு கேட்டு போலீசாருக்கு மெசேஜ் அனுப்பியுள்ளார்.;
மும்பை,
மும்பை ஒர்லியில் உள்ள போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தின் வாட்ஸ் அப் உதவி எண்ணுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் நடிகர் சல்மான் கான் ரூ.5 கோடி தர வேண்டும் என மிரட்டல் விடப்பட்டிருந்தது. இல்லையென்றால் சல்மன் கானுக்கு மோசமான கதி ஏற்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. கொலை மிரட்டலை அடுத்து பாந்திராவில் உள்ள சல்மான்கான் வீட்டுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. மேலும் சல்மான்கானுக்கு மிரட்டல் எங்கு இருந்து வந்தது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
மிரட்டலை தொடர்ந்து மும்பை பாந்த்ராவில் உள்ள சல்மான் கானின் வீடு, மும்பை பன்வெல்லில் உள்ள அவரது பண்ணை வீட்டைச் சுற்றிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. இந்தச் சூழலில் மீண்டும் அதே நம்பரில் இருந்து போலீசாருக்கு மற்றொரு மெசேஜ் வந்துள்ளது. அதாவது சல்மான் கானை மிரட்டியதற்கு மன்னிப்பு கேட்டு அந்த மெசேஜ் வந்துள்ளது. மேலும், கொலை மிரட்டல் கொடுத்து மிகப் பெரிய தவறு செய்துவிட்டதாகவும் அதில் கூறப்பட்டு இருக்கிறது.
எனினும், மிரட்டல் விடுக்கப்பட்ட நம்பரை வைத்து, போலீசார் தீவிர விசாரணையை நடத்தி வருகிறார்கள்.முதல் கட்ட விசாரணையில், ஜார்கண்ட்டில் இருந்து மெசேஜ் அனுப்பப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து, மும்பையிலிருந்து தனிப்படை போலீஸ் ஜார்கண்ட் சென்றுள்ளது. மெசேஜ் அனுப்பிய நபர் பிஷ்னோய் கேங்கை சேர்ந்தவரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.