திருநெல்லி மகா விஷ்ணு கோவிலில் பிரியங்கா காந்தி சாமி தரிசனம்
திருநெல்லி மகா விஷ்ணு கோவிலில் பிரியங்கா காந்தி சாமி தரிசனம் செய்தார்.
வயநாடு,
வயநாடு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராகுல்காந்தி ராஜினாமா செய்ததால், காலியான அந்த தொகுதிக்கு 13-ந் தேதி (புதன்கிழமை) இடைத்தேர்தல் நடக்கிறது. இதில் காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார். இதற்காக அவர் கடந்த மாதம் 23-ந் தேதி வேட்புமனு தாக்கல் செய்தார். தொடர்ந்து கடந்த மாதம் 28, 29-ந் தேதி என 2 நாட்கள் பிரியங்கா தேர்தல் பிரசாரம் செய்தார்.
இந்த நிலையில் 3-ம் கட்ட தேர்தல் பிரசாரம் செய்வதற்காக பிரியங்கா காந்தி இன்று வயநாட்டுக்கு வருகை தந்தார். அவருக்கு காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் பழமையான திருநெல்லியில் உள்ள மகா விஷ்ணு கோவிலுக்கு பிரியங்கா காந்தி சென்றார். அங்கு அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் பிரியங்கா காந்தி பூஜை பொருட்களை சாமிக்கு படைத்து, சாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் மேல் சாந்தி கிருஷ்ணன் நம்பூதிரி, தந்திரி பத்மநாபன் உண்ணி நம்பூதிரி ஆகியோர் பிரசாதங்களை வழங்கினர். பின்னர் கோவில் நிர்வாகிகளிடம் கோவிலின் பாரம்பரிய பெருமை குறித்து பிரியங்கா காந்தி கேட்டறிந்தார்.