மராட்டிய சட்டசபை தேர்தல் முடிவுகள்: இந்தியாவின் அரசியலை மாற்றும் - அகிலேஷ் யாதவ்

மராட்டிய சட்டசபை தேர்தலில் சமாஜ்வாடி கட்சி இதுவரை 5 வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

Update: 2024-10-20 18:28 GMT

மும்பை,

நாட்டின் 2-வது பெரிய மராட்டிய சட்டசபைக்கு (288 தொகுதிகள்) தேர்தல் அடுத்த மாதம் (நவம்பர்) 20-ந் தேதி நடைபெறுகிறது. இந்தநிலையில், 'இந்தியா' கூட்டணியில் உள்ள சமாஜ்வாடி கட்சித்தலைவரும், உத்தரபிரதேச மாநில எதிர்க்கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் மராட்டிய மாநிலம் துலே மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் துலே தொகுதியில் போட்டியிடும் தனது கட்சி வேட்பாளர் இர்ஷாத் ஜஹாகிர்தார் என்பவரை அறிவித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:-

பா.ஜனதா, மாநிலத்தில் கட்சிகளை பிளவுபடுத்தி ஆட்சியை திருடுகிறது. மராட்டிய சட்டசபை தேர்தல் முடிவுகள் மாநிலத்தின் அரசியலை மட்டுமல்ல, இந்தியாவின் அரசியலையும் மாற்றும். இது ஒரு வரலாற்றுத்தேர்தல். மராட்டிய தேர்தல் முடிவுகளுக்கு பிறகு, மாநிலத்தில் பா.ஜனதா அரசு வீட்டுக்கு செல்லும்போது, மத்தியிலும் பா.ஜனதா கூட்டணி அரசு கவிழும். இந்த தருணத்தில் புல்டோசரை தன்னுடன் எடுத்துச்செல்லும் எங்கள் முதல்-மந்திரியும் (உத்தரப்பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்) வீட்டுக்கு செல்வார். உத்தரப்பிரதேசத்தில் ஆட்சியை மாற்றும் வகையில், மராட்டியத்தில் பா.ஜனதா மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் தோல்வியை வாக்காளர்கள் உறுதி செய்யவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மராட்டிய சட்டசபை தேர்தலில் போட்டியிட சமாஜ்வாடி கட்சி ஏற்கனவே 4 வேட்பாளர்களை அறிவித்து இருந்தது. தற்போது மேலும் ஒரு வேட்பாளரை அறிவித்து உள்ளது. இருப்பினும் மகா விகாஸ் அகாடி கூட்டணியிடம் தங்கள் கட்சிக்கு 12 தொகுதிகளை கேட்டு இருப்பதாக அகிலேஷ் யாதவ் நிருபர்களிடம் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்