கேரள முன்னாள் முதல்-மந்திரி அச்சுதானந்தனுக்கு 101 வயது; தலைவர்கள் வாழ்த்து

கேரள முன்னாள் முதல்-மந்திரி அச்சுதானந்தன் இடுக்கி மாவட்டத்தின் மூணாறு பகுதியில் நில ஆக்கிரமிப்புகளை நீக்குவதற்காக இயக்கம் ஒன்றை தொடங்கினார்.

Update: 2024-10-20 10:29 GMT

திருவனந்தபுரம்,

கேரளாவின் முன்னாள் முதல்-மந்திரி மற்றும் கம்யூனிஸ்டு கட்சியின் பழம்பெரும் தலைவர் வி.எஸ். அச்சுதானந்தன் இன்று 101-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் மற்றும் முதல்-மந்திரி பினராயி விஜயன் உள்ளிட்டோர் தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.

இதேபோன்று கோவா கவர்னர் பி.எஸ். ஸ்ரீதரன் பிள்ளை, கேரள மந்திரிகளான வி. சிவன் குட்டி, கே.என். பாலகோபால் மற்றும் ஜி.ஆர். அனில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கொள்கை உருவாக்க குழுவின் முன்னாள் உறுப்பினர் எஸ். ராமசந்திரன் பிள்ளை மற்றும் கேரள இந்திய கம்யூனிஸ்டுவின் செயலாளர் பினோய் விஸ்வம் உள்ளிட்டோர் அச்சுதானந்தனின் வீட்டுக்கு சென்று அவரை நேரில் சந்தித்து தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.

இந்தியாவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரான அச்சுதானந்தன், வர்த்தக யூனியன் செயல்பாடுகளின் வழியே அரசியலுக்கு வந்தவர். கேரள சட்டசபையின் உறுப்பினராக 7 முறையும் மற்றும் கேரளாவின் 11-வது முதல்-மந்திரியாகவும் பதவி வகித்த அனுபவம் கொண்டவர்.

3 முறை எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்தவர். கட்சியின் செயலாளராக 3 முறையும், கட்சியின் கொள்கை உருவாக்க குழுவின் உறுப்பினராக நீண்டகாலம் இருந்தவர். முதல்-மந்திரி, சட்டசபை உறுப்பினர் அல்லது எதிர்க்கட்சி தலைவர் என பல்வேறு பொறுப்புகளை வகித்ததுடன், கம்யூனிச கொள்கைகளை தொடர்ந்து பின்பற்றுவதில் ஆர்வம் கொண்டவர்.

அவர் இடுக்கி மாவட்டத்தின் மூணாறு பகுதியில் நில ஆக்கிரமிப்புகளை நீக்குவதற்காக இயக்கம் ஒன்றை தொடங்கினார். இதனால், அவர் முதல்-மந்திரியாக இருந்தபோது, கட்சிக்குள்ளேயே அவருக்கு எதிர்ப்பு கிளம்பியது. ஆனால், அவருடைய கட்சியின் தொண்டர்களோ அவருடைய நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்