சத்தீஷ்கார்: நக்சல் தாக்குதலில் பலியான வீரர்களின் உடல்களை தோளில் சுமந்து சென்ற மந்திரி
சத்தீஷ்காரில் நக்சலைட்டுகளே இல்லாத நிலையை உருவாக்குவதற்கான பணியை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது என்று மந்திரி டேங் ராம் வர்மா கூறினார்.
ராய்ப்பூர்,
சத்தீஷ்காரின் நாராயண்பூர் மாவட்டத்தில் இந்தோ-திபெத்திய எல்லை காவல் படையினர் மற்றும் நாராயண்பூர் மாவட்ட போலீசார் இணைந்து கூட்டாக நக்சலைட்டுகளை தேடும் பணியில் நேற்று ஈடுபட்டனர். அப்போது, பதுங்கி இருந்த நக்சலைட்டுகள் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்த வீரர்களை தாக்கியதுடன், சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்றை வெடிக்க செய்து பெரிய அளவில் தாக்குதலில் ஈடுபட்டனர்.
இந்த தாக்குதலில் இந்தோ-திபெத்திய எல்லை காவல் படையை சேர்ந்த 2 வீரர்கள் உயிரிழந்தனர். இதுபற்றி பஸ்தார் பகுதிக்கான ஐ.ஜி. கூறும்போது, பலியானவர்கள் பவார் அமர் ஷாம்ராவ் மற்றும் கே. ராஜேஷ் என தெரிய வந்துள்ளது. இவர்கள் தவிர போலீசாரில் 2 பேர் காயமடைந்தனர். சிகிச்சைக்கு பின்னர் அவர்கள் குணமடைந்து வருகின்றனர் என்றார்.
இந்நிலையில், வீரர்கள் இரண்டு பேரின் உடல்களை மந்திரி டேங் ராம் வெர்மா தோளில் சுமந்தபடி சென்று இறுதி மரியாதை செலுத்தினார். இதன்பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, சத்தீஷ்காரில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்து, நக்சலைட்டுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. சத்தீஷ்காரில் நக்சலைட்டுகளே இல்லாத நிலையை உருவாக்குவதற்கான பணியை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது என்றார்.
சத்தீஷ்காரின் தன்டேவாடா-நாராயண்பூர் எல்லை பகுதியருகே நெந்தூர் மற்றும் துல்துலி கிராமங்களில் வனப்பகுதிகளில் பாதுகாப்பு படையினர் நேற்று நடத்திய என்கவுன்டரில் 38 பேர் உயிரிழந்தனர் என தன்டேவாடா போலீசார் வெளியிட்ட அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது.