'போலீசார் ஆதாரங்களை அழிக்க முயன்றனர்' - கொல்கத்தா பெண் டாக்டரின் பெற்றோர் குற்றச்சாட்டு

போலீசார் ஆரம்பத்திலிருந்தே ஆதாரங்களை அழிக்க முயன்றனர் என கொல்கத்தா பெண் டாக்டரின் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.

Update: 2024-09-09 00:25 GMT

Image Courtesy : PTI

கொல்கத்தா,

மேற்குவங்காள மாநிலம் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கார் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் 3-வது மாடியில் உள்ள கருத்தரங்கு கூடத்தில் கடந்த மாதம் 9-ந்தேதி பயிற்சி பெண் டாக்டர் (வயது 31) சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் பிரேத பரிசோதனையில் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டது தெரியவந்தது.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக சஞ்சய் ராய் என்ற நபரை கொல்கத்தா போலீசார் கைது செய்தனர். இதனிடையே, கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவின்படி இந்த வழக்கு சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட மருத்துவமனையின் முதல்வராக இருந்த சந்தீப் கோஷ் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்த விவகாரம் பூதாகாரமான நிலையில் சந்தீப் கோஷை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து இந்திய மருத்துவ சங்கம் சஸ்பெண்ட் செய்தது. இதனை தொடர்ந்து, சந்தீப் கோஷ் மருத்துவமனை முதல்வராக இருந்தபோது நிதிமுறைகேட்டில் ஈடுபட்டதாக எழுந்த புகாரில் சி.பி.ஐ. அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.

அதே சமயம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. அந்த வகையில் கொல்கத்தாவில் நடைபெற்ற பேரணியில், ஆர்.ஜி.கார் மருத்துவமனையில் கொல்லப்பட்ட பெண் டாக்டரின் பெற்றோர் கலந்து கொண்டனர்.

அப்போது பெண் டாக்டரின் தாயார் கூறுகையில், "தொடக்கத்தில் இருந்தே அரசும், நிர்வாகமும், காவல்துறையும் எங்களுக்கு ஒத்துழைப்பாக இருக்கவில்லை. போலீசார் ஆரம்பத்திலிருந்தே ஆதாரங்களை அழிக்க முயன்றனர். எங்களுக்கு நீதி கிடைக்காத வரை மக்கள் போராட்டம் தொடர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.

அதே போல் பெண் டாக்டரின் தந்தை பேசுகையில், "நீதி அவ்வளவு எளிதில் கிடைக்காது என்பது எனக்கு தெரியும். இருப்பினும் நீதி கிடைப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். எங்கள் பலத்தின் முக்கிய ஆதாரமாக மக்கள் இருக்கிறார்கள். அவர்கள் எங்களுடன் உறுதுணையாக இருப்பார்கள் என நம்புகிறேன்" என்று தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்