சந்திரபாபு நாயுடுவை கேள்வி கேட்க பவன் கல்யாணுக்கு தைரியமில்லை: ஜெகன் மோகன் ரெட்டி
ஆந்திர பிரதேசத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு சரியில்லை என்றால், சந்திரபாபு நாயுடுவை அல்லவா நீங்கள் (கல்யாண்) கேள்வி கேட்க வேண்டும்? என ஜெகன் மோகன் ரெட்டி கூறியுள்ளார்.
ஐதராபாத்,
ஆந்திர பிரதேசத்தில் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. துணை முதல்-மந்திரியாக பவன் கல்யாண் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், ஆந்திர பிரதேசத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு சரியில்லை என கூறி உள்துறை மந்திரி வங்கலப்புடி அனிதாவை, பவன் கல்யாண் விமர்சித்தார்.
இந்நிலையில், இதுபற்றி ஆந்திர பிரதேச முன்னாள் முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி இன்று தடப்பள்ளியில் அவருடைய வீட்டில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், ஜனசேனா தலைவரான பவனை கடுமையாக சாடினார்.
சட்டம் மற்றும் ஒழுங்கு யாருடைய பொறுப்பு? அது முதல்-மந்திரியின் நேரடி கண்காணிப்பில் இல்லையா? சட்டம் மற்றும் ஒழுங்கு சரியில்லை என்றால், யாரை நீங்கள் (கல்யாண்) கேள்வி கேட்க வேண்டும்? சந்திரபாபு நாயுடுவை இல்லையா? என கேட்டு விட்டு, சந்திரபாபு நாயுடுவை கேள்வி கேட்க பவன் கல்யாணுக்கு தைரியமில்லை.
அதனால், தலித் மந்திரியை கடிந்து கொள்கிறார் என கூறினார். அவர் படத்தில் பேசுவது போன்று வசனங்களை பேசி வருகிறார் என்றும் ஜெகன் மோகன் ரெட்டி கூறியுள்ளார்.
பவன் கல்யாண், கடந்த திங்கட்கிழமை பிதபுரம் பகுதியில் பேரணி ஒன்றில் பங்கேற்று பேசும்போது, மாநிலத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு சரியில்லை என அனிதாவை கடிந்து கொண்டார். சட்டம் மற்றும் ஒழுங்கு மேம்படவில்லை என்றால், உள்துறை பொறுப்பை கையில் எடுத்து கொள்வேன் என்று அப்போது கூறினார்.