டெல்லியில் மோசமான வானிலை; 100க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதம்
டெல்லியில் மோசமான வானிலை காரணமாக 100க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக வந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.;
புதுடெல்லி,
டெல்லியில் கடந்த சில நாட்களாக அடர்ந்த பனிமூட்டம் நிலவி வருகிறது. இதனால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில், டெல்லியில் இன்று காலை அடர்த்தியான மூடுபனி காணப்பட்டது. இந்த மோசமான வானிலை காரணமாக டெல்லி விமான நிலையத்தில் 100க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக வந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், விமானங்கள் சற்று தாமதமாக தரையிறங்கின. ஆனால் இதுவரை எந்தவொரு விமானமும் திசைதிருப்பப்படவில்லை என்றார்.
டெல்லி சர்வதேச விமான நிலையம் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், புதுப்பிக்கப்பட்ட விமான தகவல்களுக்கு சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்தை தொடர்பு கொள்ளுமாறு பயணிகள் கேட்டு கொள்ளப்படுகிறார்கள். ஏதேனும் அசவுகரியம் ஏற்பட்டால் அதற்காக வருந்துகிறோம் என்று தெரிவித்துள்ளது.