நடப்பு கல்வியாண்டு முதல் தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்துகிறது ஒடிசா அரசு
தேசிய கல்விக் கொள்கையின்படி, வழக்கமான மூன்றாண்டு படிப்புகளுக்குப் பதிலாக நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்புகள் தொடங்கப்படும்.;
புவனேஸ்வர்:
ஒடிசா மாநிலத்தில் கல்வி முறையில் ஏராளமான சீர்திருத்தங்களை கொண்டு வர உள்ளது. இதன் ஒரு பகுதியாக அரசு நடத்தும் பல்கலைக்கழகங்கள் மற்றும் இணைப்புக் கல்லூரிகளில் நடப்பு கல்வியாண்டு முதல் தேசிய கல்விக்கொள்கையை (NEP 2020) அமல்படுத்த உள்ளது. இதற்கான முடிவை முதல்-மந்திரி மோகன் சரண் மாஜி எடுத்ததாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
தேசிய கல்விக் கொள்கையின்படி (NEP 2020) உயர்கல்வி முறையை மிகவும் தரமானதாகவும், தன்னாட்சி மற்றும் உள்ளடக்கியதாகவும் மாற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
தேசிய கல்விக் கொள்கையின்படி, வழக்கமான மூன்றாண்டு படிப்புகளுக்குப் பதிலாக நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்புகள் தொடங்கப்படும். இந்த படிப்பில் சேரும் மாணவர்கள், ஒவ்வொரு ஆண்டும் நிறைவு செய்த பிறகு, டிப்ளமோ, பட்டம் மற்றும் கவுரவ பட்டம் ஆகிய சான்றிதழ்களை பெறலாம்.
பல்கலைக்கழக மானியக் குழுவின் (யு.ஜி.சி.) வழிகாட்டுதல்களின் அடிப்படையில் மாநில அரசு கூடுதல் தகுதிகளுக்கான கட்டமைப்பை உருவாக்கியுள்ளது. இதன் கீழ் மாணவர்கள் திறன் மேம்பாடு, இன்டன்ஷிப், சமூக சேவை மற்றும் பாடத்திட்டத்திற்கு அப்பாற்பட்ட என்.சி.சி மற்றும் என்.எஸ்.எஸ். போன்ற கூடுதல் தகுதிகளை வளர்த்துக்கொள்ளலாம்.
மாணவர்களே தங்கள் பாடங்களை தேர்வு செய்யவும், 'இடைநிற்றல், மீண்டும் சேருதல்' விருப்பத்தை பயன்படுத்தி ஏழு ஆண்டுகளுக்குள் பட்டப் படிப்பை முடிக்கவும் இந்த திட்டம் உதவும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின்கீழ், கல்லூரியில் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள், பாதியில் நிறுத்திவிட்டு கூடுதல் தகுதிக்கான படிப்பை மேற்கொண்டு, பின்னர் மீண்டும் கல்லூரியில் சேர்ந்து பட்டப்படிப்பை தொடரலாம்.