தேசிய ஜனநாயக கூட்டணி; நாடாளுமன்ற குழு தலைவராக மோடி தேர்வு
தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்ற குழு தலைவராக மோடி ஒருமனதாக தேர்வுசெய்யப்பட்டார்.;
புதுடெல்லி,
தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள், கட்சித் தலைவர்களின் ஆலோசனை கூட்டம் பழைய நாடாளுமன்ற வளாகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் அமித்ஷா, ஜே.பி.நட்டா, ராஜ்நாத்சிங் உள்ளிட்ட பா.ஜ.க. மூத்த தலைவர்களும், சந்திரபாபு நாயுடு, நிதீஷ்குமார், ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட கூட்டணிக் கட்சி தலைவர்களும் பங்கேற்றுள்ளனர்.
கூட்டணிக் கூட்டத்தில் பங்கேற்க வந்த மோடிக்கு அனைவரும் எழுந்து நின்று கைதட்டி வரவேற்பளித்தனர். மோடியை பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா வரவேற்றார்.
கூட்டத்தின்போது பேசிய பாஜக மூத்த தலைவர் ராஜ்நாத் சிங், பாஜக நாடாளுமன்ற குழு மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக மோடியின் பெயரை முன்மொழிந்தார். தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்ற குழு தலைவராக மோடியை தேர்வு செய்யும் தீர்மானத்தை அமித்ஷா வழிமொழிந்தார்.
இதையடுத்து சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்து பேசினர். இதனை தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்ற குழு தலைவராக மோடி ஒருமனதாக தேர்வுசெய்யப்பட்டார்.