மும்பை: ரூ.2.67 கோடி மதிப்பிலான தங்கம் கடத்தல்; விமான நிலைய அதிகாரிகள் 2 பேர் கைது
மராட்டியத்தில் விமான நிலையத்தில் பெண் செயல் அதிகாரியிடம் இருந்து 3,350 கிராம் எடை கொண்ட ரூ.2.67 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
மும்பை,
மராட்டியத்தின் மும்பை நகரில் உள்ள சத்ரபதி சிவாஜி மகராஜ் சர்வதேச விமான நிலையத்தில் தரைதள பராமரிப்பு பணியாளர் ஒருவர் விமானத்தில் இருந்து கழிவுகளை ஏற்றி செல்லும் வாகனத்தில் மறைத்து தங்கம் கடத்தி வந்துள்ளார்.
இதனை வாடிக்கையாளர் சேவைக்கான பெண் செயல் அதிகாரியிடம் கொடுத்திருக்கிறார். அந்த பெண்ணை வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் சந்தேகத்தின்பேரில் சோதனையிட்டனர். இதில், 3,350 கிராம் எடை கொண்ட ரூ.2.67 கோடி மதிப்பிலான, பேஸ்ட் வடிவில் மறைத்து வைக்கப்பட்டு, கடத்த தயாராக இருந்த தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து, 2 பேரையும் அதிகாரிகள் கைது செய்தனர். கடந்த அக்டோபர் 29-ந்தேதி சத்ரபதி சிவாஜி மகராஜ் சர்வதேச விமான நிலையத்தில், விமான புலனாய்வு பிரிவு அதிகாரிகள் 2 வெவ்வேறு வழக்குகளில் 1.915 கிலோ எடை கொண்ட ரூ.1.39 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.