சொத்துக்களை மகளுக்கு கொடுத்துவிடுவார் என சந்தேகம்: மாமனாரை அடித்துக்கொன்ற மருமகள்
சொத்துக்களை மகளுக்கு கொடுத்துவிடுவார் என்ற சந்தேகத்தில் மாமனாரை மருமகளே அடித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.;
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் சாஜஹான்பூர் மாவட்டம் ரதபூர் கிராமத்தை சேர்ந்தவர் ராம்சேவக் (வயது 65). இவரது மருமகள் ஷாக்ஷி.
இதனிடையே , ராம்சேவக்கிற்கும் அவரது மருமகள் ஷாக்ஷிக்கும் இடையே அவ்வப்போது சொத்து விவகாரத்தில் பிரச்சினை எழுந்துள்ளது. ராம்சேவக் தனது சொத்துக்களை அவரது மகளுக்கு கொடுத்துவிடுவார் என மருமகள் ஷாக்ஷிக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் மாமனாரை கொலை செய்ய மருமகள் ஷாக்ஷி திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில், கடந்த புதன்கிழமை இரவு ராம்சேவ் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது ஷாக்ஷி தனது உறவினர்களான சுபவ் மிஷ்ரா, சத்ருகன் மிஷ்ரா ஆகியோருடன் சேர்ந்து ராம்சேவை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்துள்ளார்.
ராம்சேவ் கொலை செய்யப்பட்டது குறித்து மறுநாள் காலை தெரியவந்த நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சொத்துக்காக மாமனார் ராம்சேவக்கை மருமகள் ஷாக்ஷி தனது உறவினர்களுடன் சேர்ந்து அடித்துக்கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து ஷாக்ஷி உள்பட கொலையில் தொடர்புடைய 3 பேரையும் கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.