பாலியல் குற்றச்சாட்டு: கேரள திரையுலகில் அடுத்தடுத்து விலகும் முக்கிய நடிகர்கள்

பாலியல் குற்றச்சாட்டு எதிரொலியாக கேரள திரையுலகில் அடுத்தடுத்து முக்கிய நடிகர்கள் விலகி வருகின்றனர்.;

Update: 2024-08-25 06:20 GMT

திருவனந்தபுரம்,

கேரளாவில் மலையாள நடிகைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை புகார்கள் குறித்து அண்மையில் ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் மேற்கு வங்காள நடிகை ஸ்ரீ லேகா மித்ரா, மலையாள நடிகரும், இயக்குனரும், கேரள திரைப்பட அக்காடமியின் தலைவருமான ரஞ்சித் மீது பகிரங்கமாக பாலியல் குற்றச்சாட்டை தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், "கடந்த 2009-ம் ஆண்டு வெளியான 'பாலேரி மாணிக்கம்' என்ற படத்தில் நடிக்க, நடிகரும் இயக்குனருமான ரஞ்சித் என்னை அழைத்தார். அப்போது அவர் தனி அறையில் வைத்து எனது வளையல்களை தொடுவது போல் கைகளை தடவியதுடன் தலை முடியை கோதி விட்டார். அவரது நோக்கத்தை புரிந்து கொண்ட நான் அந்த அறையில் இருந்து வெளியே வந்தேன். பின்னர் அந்த படத்தில் நடிக்கவே இல்லை.

நடிகர் ரஞ்சித் மீதான எனது பாலியல் குற்றச்சாட்டில் நான் உறுதியாக இருக்கிறேன். யாராவது எனக்கு உதவினால் புகார் அளிக்க தயாராக உள்ளேன். ஆனால் புகாரை தொடர்ந்து கோர்ட்டு வழக்கு என கேரளாவுக்கும், மேற்கு வங்காளத்துக்கும் இடையே என்னால் அலைய முடியாது. கேரளாவில் 2017-ம் ஆண்டு ஒரு நடிகைக்கு நேர்ந்த சம்பவம் தொடர்பான வழக்கு இன்னமும் எந்த முடிவும் இல்லாமல் தொடர்கிறது. புகார் வழக்கு என்று வந்தால் கோர்ட்டு தீர்ப்புக்காக பல ஆண்டுகள் வாழ்வை தொலைக்க நேரிடும். ஆனால் எனக்கு நேர்ந்த கொடுமை, மோசமான அனுபவம் குறித்து வெளிப்படுத்த எனக்கு உரிமை உள்ளது. அதனால் யாராவது எனக்கு உதவினால் புகார் அளிக்க தயார். மேலும் நடிகர் ரஞ்சித், தான் செய்த தவறை ஒப்புக் கொண்டு மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.

நடிகையின் குற்றச்சாட்டை தொடர்ந்து நடிகர் ரஞ்சித் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மாநில டி.ஜி.பி.யிடம் மாநில இளைஞர் காங்கிரஸ் சார்பில் துணைத்தலைவர் அபின் வர்க்கி புகார் அளித்திருந்தார்.

இந்நிலையில் கேரள கலாசித்ரா அகாடமியின் தலைவர் பொறுப்பில் இருந்து நடிகர் ரஞ்சித் ராஜினாமா செய்துள்ளார். நடிகை முன்வைத்த பாலியல் குற்றச்சாட்டால் ரஞ்சித் விலகி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் (AMMA) பொதுச் செயலாளர் நடிகர் சித்திக் மீது நடிகையும், மாடலுமான ரேவதி பாலியல் புகார் தெரிவித்திருந்தார். இதனையடுத்து பொதுச்செயலாளர் பதவியை நடிகர் சித்திக் இன்று ராஜினாமா செய்தார். நடிகர் சித்திக் தனது ராஜினாமா கடிதத்தை மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் மோகன்லாலிடம் சமர்ப்பித்தார்.

பாலியல் குற்றச்சாட்டு எதிரொலியாக அடுத்தடுத்து முக்கிய பதவிகளில் இருந்து நடிகர்கள் விலகி வருவது கேரள திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்