மத்திய பிரதேசம்: சாலையோரம் 2 பேரை திடீரென தாக்கிய குள்ளநரி; வைரலான வீடியோ

மத்திய பிரதேசத்தில் குள்ளநரி தாக்கியதில் காயமடைந்த ஷியாம் யாதவ் மற்றும் நர்மதா பிரசாத் ஆகிய 2 பேரும் நர்மதாபுரம் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Update: 2024-09-10 12:13 GMT

போபால்,

மத்திய பிரதேசத்தின் செஹோர் மாவட்டத்தில் ரெஹ்தி தாலுகாவில் சகோனியா பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் நேற்று மாலை 5 மணியளவில் குடியிருப்புவாசிகள் வசிக்கும் பகுதியில் 2 பேர் சாலையோரம் அமர்ந்து இருந்தனர்.

அப்போது, குள்ளநரி ஒன்று அவர்களை நோக்கி ஓடி வந்தது. அது அருகே வந்ததும் அவர்கள் 2 பேரும் உஷாராகி எழுந்து ஓட முயன்றனர். எனினும், அவர்களில் ஒருவரை விடாமல் துரத்தி தாக்கியது. அவர் கற்களை எடுத்து வீசி அதனை விரட்டியடிக்க முயன்றுள்ளார்.

ஆனால் அவரை விடாமல் தாக்கிய குள்ளநரி, ஒரு கட்டத்தில் அவரை கவ்வி பிடித்து கொண்டது. ஆனால், உடனடியாக செயல்பட்ட அவர், அதனை 12 அடி தூரத்திற்கு வீசி எறிந்து விட்டார். இந்த சம்பவத்தில் காயமடைந்த ஷியாம் யாதவ் மற்றும் நர்மதா பிரசாத் ஆகிய 2 பேரும் நர்மதாபுரம் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுபற்றிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

வனப்பகுதியால் கிராமம் சூழப்பட்டு உள்ளது. குள்ளநரி பதுங்கியிருந்து மீண்டும், எந்நேரமும் தாக்குதல் நடத்த கூடிய ஆபத்து உள்ளது. இதனால், அந்த கிராமவாசிகள் அச்சத்தில் உள்ளனர். அவர்களில் பலர் வீடுகளை விட்டு வெளியே செல்லும்போது, கைகளில் பாதுகாப்புக்காக தடிகளை கொண்டு செல்கின்றனர். மற்றொரு சம்பவத்தில், சல்கான்பூர் பகுதியில் குள்ளநரி ஒன்று நேற்று 5 பேரை தாக்கின. இதில், 2 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது.

சமீபத்தில் உத்தர பிரதேசத்தில் ஓநாய்கள் தாக்குதல் நடத்தியதில் மொத்தம் பெண், சிறுவர் சிறுமிகள் உள்பட 10 பேர் வரை உயிரிழந்தனர். 35 பேர் வரை காயமடைந்து உள்ளனர். இதனை தொடர்ந்து, ஓநாய்களை கண்டதும் சுட உத்தரபிரதேச அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. சமீப நாட்களாக ஓநாய், குள்ளநரி உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து மனிதர்களை தாக்க தொடங்கி இருப்பது, வனவாழ் உயிரின மேலாண்மையை சிறப்பாக கையாள வேண்டிய தேவையை எடுத்து காட்டியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்