சக்கர வியூகம்போல் நாடு தாமரை வியூகத்தில் சிக்கியுள்ளது - ராகுல்காந்தி

ஜிஎஸ்டி, பண மதிப்பிழப்பு போன்ற நடவடிக்கையால் தொழில்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ராகுல்காந்தி கூறினார்.

Update: 2024-07-29 09:23 GMT

புதுடெல்லி,

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த 22-ம் தேதி தொடங்கிய நிலையில், 23-ம் தேதி 2024, 2025-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

அதை தொடர்ந்து, நாடாளுமன்றத்தின் இருஅவைகளிலும் பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கியது. பட்ஜெட் குறித்து காரசார விவாதம், ஆளுங்கட்சி-எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடையே வார்த்தை மோதல், அமளி என அவை நடவடிக்கைகளில் அனல் பறந்து வருகிறது.

இந்தநிலையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் மக்களவையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி பேசியதாவது:-

மகாபாரதத்தில் அபிமன்யூ சக்கர வியூகத்தில் சிக்கியதுபோல நாடும் தாமரை வியூகத்தில் சிக்கியுள்ளது. சக்கர வியூகத்தை துரோணர், அஸ்வத்தாமன் கட்டுப்படுத்தியதுபோல் மோடி,அமித்ஷா கட்டுப்படுத்துகின்றனர்.

இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்டோர் சக்கர வியூகத்தில் சிக்கியுள்ளனர். மகாபாரதத்தில் சக்கர வியூகம் நடந்ததுபோல் தற்போது தாமரை வியூகம் நடக்கிறது. (சக்கர வியூகம் தொடர்பான ராகுல்காந்தியின் பேச்சுக்கு பாஜக எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்)

பாஜகவில் ஒருவர் மட்டுமே பிரதமர் பதவிக்கு வர கனவு காணமுடியும் மற்றவர்களுக்கு உரிமையில்லை. பிரச்சினை ஏற்படுமோ என்ற பயம் என்பது பாஜக மந்திரிகள் தொடங்கி அத்தனை பேருக்கும் இருக்கிறது.

பாஜக ஆட்சியில் விவசாயிகள், தொழிலாளர்கள் அச்சம் அடைந்து உள்ளனர். எனது பேச்சைக் கேட்டு பாஜகவினர் சிரித்தாலும் உள்ளுக்குள் ஒருவித அச்சத்தில்தான் உள்ளனர். ஜிஎஸ்டி, பண மதிப்பிழப்பு போன்ற நடவடிக்கையால் தொழில்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அரசின் வரி தீவிரவாதத்தால் இந்திய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஜிஎஸ்டி மூலம் வரி பயங்கரவாதத்தை ஏவியுள்ளது மத்திய அரசு.

இந்திய இளைஞர்களுக்காக நீங்கள் என்ன செய்தீர்கள்? என மத்திய நிதி மந்திரி நிர்மலாவுக்கு ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார். புதிதாக கொண்டுவரப்பட்ட இன் டர்ன்ஷிப் திட்டத்தால் பெரு நிறுவனங்கள் பயன்பெறும். வேலையில்லா திண்டாட்டத்திற்கு இன் டர்ன் ஷிப் திட்டம் ஒரு பேண்ட் எய்ட் போன்றதுதான்.

நாடு முழுவதும் வினாத்தாள்கள் கசிந்துள்ளன. இதுகுறித்து பட்ஜெட்டில் ஏதேனும் இடம்பெற்றுள்ளதா? கடந்த 10 ஆண்டுகளில் நடந்த நீட் தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக பட்ஜெட்டில் எந்த வார்த்தையும் இடம்பெறவில்லை. பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு குறைந்த அளவே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மோடி அரசு என்பது வேலைவாய்ப்பின்மை மற்றும் வினாத்தாள் கசிவின் அர்த்தமாக மாறிவிட்டது.

நாடாளுமன்ற வளாகத்திற்குள் விவசாயிகளை அனுமதிக்காதது ஏன்? விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதார விலை குறித்த அறிவிப்பு பட்ஜெட்டில் இடம்பெறாதது ஏன்? குறைந்தபட்ச ஆதாரவிலைக்கான சட்டப்பூர்வ அங்கீகாரத்தை ஏன் இன்னும் அளிக்கவில்லை? அக்னிவீர் திட்டத்தால் ஓய்வூதியம் தொடர்பாக பட்ஜெட்டில் எதுவும் இடம்பெறவில்லை என்றார். 

தொடர்ந்து பேசிய ராகுல்காந்தி, அம்பானி, அதானி என்ற பெயரை சொல்லக்கூடாது என சபாநாயகர் கூறியதால் ஏ1,ஏ2 என ராகுல்காந்தி குறிப்பிட்டார். தொலைத்தொடர்பு, துறைமுகம் போன்றவற்றை அம்பானி அதானியிடம் கொடுத்திருக்கிறார்கள். தற்போது ரெயில்வேதுறையையும் சிலரிடம் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள் என ராகுல் காந்தி பேசினார் .ராகுல் பேசியதற்கு ஆளும் கட்சி எம்.பிக்கள்.,எதிர்ப்பு தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்