ஜார்கண்ட் முதல்-மந்திரியாக நாளை மறுநாள் பதவியேற்கிறார் ஹேமந்த் சோரன்

இன்று மாலை 4 மணிக்கு கவர்னரை சந்திக்கும் ஹேமந்த் சோரன், ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார்.

Update: 2024-11-24 07:39 GMT

கோப்புப்படம்

ராஞ்சி,

ஜார்கண்டில் மொத்தமுள்ள 81 தொகுதிகளுக்கும் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. முதற்கட்ட தேர்தல் 14ம் தேதியும், 2ம் கட்ட தேர்தல் 20ம் தேதியும் நடைபெற்றது. ஜார்கண்டில் ஆளும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான இந்தியா கூட்டணியும், பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் மோதின.ஜார்கண்ட் சட்டசபை தேர்தலில் மொத்தம் 1,211 வேட்பாளர்களாக களமிறங்கினர். இத்தேர்தலில் 67.74 சதவீத வாக்குகள் பதிவாகின.

இந்த பரபரப்பான சூழலில் நேற்று வாக்குகள் எண்ணப்பட்டன. காலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதுமே பெரும்பாலான தொகுதிகளில் ஆளும் கூட்டணி வேட்பாளர்கள் முன்னிலை பெறத்தொடங்கினர். இந்த முன்னிலையை தொடர்ந்து தக்க வைத்த ஆளும் கூட்டணி, இறுதியில் அதிகமான இடங்களில் வென்று ஆட்சியை தக்க வைத்தது.

மாநிலத்தில் மொத்தமுள்ள 81 தொகுதிகளில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி 56 இடங்களை கைப்பற்றியது. இதில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா 34 இடங்களும், காங்கிரஸ் 16, ராஷ்டிரீய ஜனதாதளம் 4, மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு 2 இடங்கள் பெற்றன.

அதேநேரம் தேசிய ஜனநாயக கூட்டணி 24 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் பா.ஜனதா 21 இடங்கள், ஐக்கிய ஜனதாதளம், லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்), ஜார்கண்ட் மாணவர் யூனியன் கட்சிகள் தலா ஓரிடத்தில் வென்றுள்ளன. இதைத்தவிர ஜார்கண்ட் ஜனநாயக புரட்சிகர முன்னணி ஒரு தொகுதியை கைப்பற்றியது.

இதனிடையே பர்ஹைட் தொகுதியில் போட்டியிட்ட முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் 39 ஆயிரத்து 791 வாக்குகள் வித்தியாசத்தில் ஹாட்ரிக் வெற்றி பெற்றார். காண்டே தொகுதியில் போட்டியிட்ட அவரது மனைவி கல்பனா சோரன் 17 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலும், தும்கா தொகுதியில் போட்டியிட்ட அவரது சகோதரர் பசந்த் சோரன் 14 ஆயிரத்து 588 வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றனர்.

சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றதை தொடர்ந்து ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் நாளை மறுநாள் முதல்-மந்திரியாக பதவியேற்பார் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன்படி வரும் 26-ம் தேதி நடைபெறும் பதவியேற்பு விழாவில் மம்தா பானர்ஜி, ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட இந்திய கூட்டணியை சேர்ந்த முக்கிய தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இன்று மாலை 4 மணிக்கு அம்மாநில கவர்னரை சந்திக்கும் ஹேமந்த் சோரன், ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்