பெங்களூருவில் 3 நாட்கள் தங்கியிருந்து சிகிச்சை பெற்ற இங்கிலாந்து மன்னர் சார்லஸ்
இங்கிலாந்து மன்னர் சார்லஸ் பெங்களூருவில் 3 நாட்கள் தங்கியிருந்து ஆயுர்வேத மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக் கொண்டார்.;
பெங்களூரு,
இங்கிலாந்து மன்னர் சார்லஸ் பெங்களூருவுக்கு தனிப்பட்ட முறையில் பயணம் செய்துள்ளார். அவருடன் ராணி கமிலாவும் வந்திருந்தார். இந்த தம்பதியினர் பெங்களூரு ஒயிட்பீல்டுக்கு அருகே சமேதனஹள்ளியில் உள்ள 'சவுக்யா' என்ற சர்வதேச ஹோலிஸ்டிக் மையத்தில் 3 நாட்கள் தங்கியிருந்து உடல்நலத்திற்கான ஆயுர்வேத மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக் கொண்டனர்.
காலை நேரங்களில் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர். சிகிச்சையின் ஒரு பகுதியாக சிறப்பான உணவு முறையை அவர்கள் கடைப்பிடித்தனர். மேலும் இங்கிலாந்து மன்னர் சார்லஸ், தியானம் உள்ளிட்ட பயிற்சிகளை மேற்கொண்டதோடு, தனது மனைவியுடன் நடைபயணம், இயற்கை விவசாயம் ஆகியவற்றை மேற்கொண்டு நேரத்தை செலவிட்டார்.
பெங்களூருவில் 3 நாட்கள் தங்கியிருந்த சார்லஸ்-கமிலா தம்பதியினர் இன்று காலை இங்கிலாந்து புறப்பட்டுச் சென்றதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு கடந்த 2019-ம் ஆண்டு 'சவுக்யா' மையத்தில் சார்லஸ் தனது 71-வது பிறந்தநாளை கொண்டாடினார். இந்த மையத்தின் தலைவரான டாக்டர் ஈசாக் மதாய், இங்கிலாந்து மன்னர் சார்லஸின் முடிசூட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக அழைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.