வரதட்சணை கொடுமையால் கர்ப்பிணி தற்கொலை

வரதட்சணை கொடுமையால் 6 மாத கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update:2024-11-25 01:46 IST

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெங்களூருவை அடுத்த தொட்டபள்ளாப்புரா போலீஸ் எல்லைக்குட்பட்ட கும்மனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவர் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ரூபா. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் 2 பேரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தற்போது ரூபா 6 மாத கர்ப்பிணியாக இருந்தார்.கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டில் தனியாக இருந்த ரூபா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தொட்டபள்ளாப்புரா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்தனர். விசாரணையில் ரூபா வாழ்க்கையில் விரக்தியடைந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. ஆனால் ரூபாவின் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் குற்றம்சாட்டினர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் ரூபா கைப்பட எழுதிய கடிதம் போலீசாருக்கு கிடைத்தது. அந்த கடிதத்தில் தன்னிடம் தனது கணவர் சுரேஷ், மாமனார் நரசிம்ம மூர்த்தி, மாமியார் தேவம்மா ஆகியோர் வரதட்சணை கேட்டு தொல்லை கொடுத்து வந்தனர். அவர்களின் கொடுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று ரூபா எழுதி இருந்ததாக கூறப்படுகிறது.

அந்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார், ரூபாவின் கணவர் சுரேஷ், மாமனார் நரசிம்ம மூர்த்தி, மாமியார் தேவம்மா ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்