கேரளா: காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வாகன பேரணி

கேரளாவில் நடந்த பேரணியில் பிரியங்கா காந்தி பேசும்போது, உங்களுடைய அன்பு மற்றும் ஆதரவுக்காக உள்ளத்தின் ஆழத்தில் இருந்து நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என கூறினார்.

Update: 2024-12-01 10:06 GMT

வயநாடு,

கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் பிரியங்கா காந்தி கடந்த 28-ந்தேதி எம்.பி.யாக பொறுப்பேற்று கொண்டார். அரசியல் சாசன நகல் ஒன்றை கையில் வைத்தபடி, கேரள கசவு சேலையில் அவர் பதவி பிரமாணம் ஏற்று கொண்டார்.

இதன்பின்பு, முதன்முறையாக வயநாடு தொகுதிக்கு அவர் நேற்று சென்று சேர்ந்துள்ளார். இந்நிலையில், கேரளாவின் வயநாடு தொகுதியில் மனந்தவாடி பகுதியில் திறந்த நிலையிலான வாகனம் ஒன்றில் பேரணியாக அவர் சென்றார். அவருடைய இருபுறமும் அவரை வரவேற்கும் வகையில், பொதுமக்கள், கட்சி தொண்டர்கள் அதிக அளவில் திரண்டு இருந்தனர். அவர்கள் மூவர்ண பலூன்களை ஏந்தியபடி, எம்.பி. பிரியங்காவுக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.

இந்த பேரணியின் ஒரு பகுதியாக பிரியங்கா உரையாற்றினார். அவர் மீது நம்பிக்கை வைத்து, எம்.பி.யாக தேர்ந்தெடுத்ததற்காக வயநாடு மக்களுக்கு தன்னுடைய நன்றியை தெரிவித்து கொண்டார்.

அவர் பேசும்போது, உங்களுடைய அன்பு மற்றும் ஆதரவுக்காக என்னுடைய உள்ளத்தின் ஆழத்தில் இருந்து நன்றியை தெரிவித்து கொள்கிறேன். என்னுடைய வெற்றிக்காக கடுமையாக பணியாற்றிய ஐக்கிய ஜனநாயக முன்னணியின் தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

அனைத்து தலைவர்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன் என்றார். இதேபோன்று, கடந்த 5 ஆண்டுகளில் அவருடைய சகோதரர் ராகுல் காந்திய ஆற்றிய அனைத்து பணிகளுக்காகவும் நன்றி தெரிவித்து கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்