பெங்களூரு கட்டிட விபத்து: முதல்-மந்திரி சித்தராமையா நேரில் ஆய்வு

பெங்களூரு கட்டிட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்துள்ளார்.

Update: 2024-10-24 09:50 GMT

பெங்களூரு,

கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் கடந்த செவ்வாய் கிழமை அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 8 தொழிலாளர்கள் பலியானார்கள். 6 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். விதிமுறைகளை மீறி கூடுதலாக 2 மாடிகள் கட்டியதாக உரிமையாளர் மகன், காண்டிராக்டர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தநிலையில், கட்டிட விபத்து நடந்த இடத்தை அம்மாநில முதல்-மந்திரி சித்தராமையா நேரில் பார்வையிட்டார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சித்தராமையா,

இடிந்து விழுந்த இந்தக் கட்டிடம் அனுமதி பெறாமல் கட்டப்பட்டு வந்துள்ளது. மழையின் காரணமாக கட்டிடம் இடிந்து விழவில்லை. தரமற்ற பணிகளால் இடிந்து விழுந்துள்ளது. இதுகுறித்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பணி இடைநீக்க நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. மண்டல அதிகாரிகளுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்து சிகிச்சைப் பெற்றுவருபவர்களின் மருத்துவச் செலவை அரசே ஏற்கும். கட்டிட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்கான நிவாரணம் அவர்களை மருத்துவமனையில் சென்று பார்த்த பின்பு அறிவிக்கப்படும்.

பாஜக ஆட்சியின் போது இதுபோன்ற விபத்துச் சம்பவங்கள் நடைபெறவில்லையா? எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் போது நானே பலமுறை சம்பவ இடங்களுக்குச் சென்று நேரில் பார்த்திருக்கிறேன். யேலகங்காவில் இந்த முறை அதிக மழை பெய்துள்ளது. நாங்கள் எங்களின் பொறுப்புகளை மறந்து ஓடி ஒளியவில்லை என்று தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்