கேரளாவில் காணாமல்போன இளம்பெண் ஆற்றில் பிணமாக மீட்பு
கேரளாவில் காணாமல்போன இளம்பெண் ஆற்றில் பிணமாக மீட்கப்பட்டாள்.;
திருவனந்தபுரம்,
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் கோட்டக்குன்னு மேல் பகுதியை சேர்ந்த சுமா என்பவரது மகள் சினேகா அஞ்சலி. இவர் நேற்று முன்தினம் வெளியே சென்று வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் கொயிலாண்டி போலீசார் தேடி வந்தனர்.
இந்தநிலையில் கொயிலாண்டி அருகே முத்தாண்டி ஆற்றின் கரையில் காலணி, குடை இருப்பதாக தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு சென்று ஆற்றில் தேடினர். அதோடு தீயணைப்பு வீரர்களும் தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆற்றில் இருந்து 500 மீட்டர் தொலைவில் இருந்து பெண் உடல் மீட்கப்பட்டது.
விசாரணையில் இறந்தது காணாமல் போன சினேகா அஞ்சலி என்பது தெரியவந்தது. அவர் எப்படி இறந்தார் என்பது தெரியவில்லை. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.