திரும்பப்பெறப்படாத 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் எவ்வளவு? - மத்திய மந்திரி தகவல்
திரும்பப்பெறப்படாத 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் எவ்வளவு? என்பது குறித்து மத்திய மந்திரி விளக்கம் அளித்துள்ளார்.;
புதுடெல்லி,
ரூ.2 ஆயிரம் நோட்டுகள் திரும்பப்பெறப்பட்ட விவகாரம் தொடர்பாக எம்.பி. ஒருவர் நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்டிருந்தார். இதற்கு மத்திய நிதித்துறை இணை மந்திரி பங்கஜ் சவுத்ரி அளித்த எழுத்துப்பூர்வ பதிலில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கடந்த ஆண்டு மே மாதம் 19-ந் தேதி முதல் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந் தேதி வரை அனைத்து வங்கி கிளைகளிலும் ரூ.2 ஆயிரம் நோட்டுகள் திரும்பப்பெறப்பட்டன. பின்னர் கடந்த ஆண்டு அக்டோபர் 9-ந் தேதியில் இருந்து ரிசர்வ் வங்கியின் 19 வெளியீட்டு கிளைகளில் வாங்கப்படுகிறது. அத்துடன் தபால் அலுவலகங்கள் மூலமாகவும் அந்த வெளியீட்டுக் கிளைகள் பெறுகின்றன.
ரூ.2 ஆயிரம் நோட்டுகளை திரும்பப் பெறுதல் இன்னும் தொடர்கிறது. கடந்த ஆண்டு மே மாதம் 19-ந் தேதி நிலவரப்படி ரூ.3 லட்சத்து 55 ஆயிரத்து 858 கோடி மதிப்பிலான நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. இதில் ரூ.3 லட்சத்து 42 ஆயிரத்து 840 கோடி மதிப்பிலான நோட்டுகள் கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ந் தேதி நிலவரப்படி திரும்பப்பெறப்பட்டு இருந்தன. ரூ.13 ஆயிரத்து 18 கோடி மதிப்பிலான நோட்டுகள் மட்டும் பாக்கி இருந்தன. கடந்த 1-ந் தேதி நிலவரப்படி ரூ.6 ஆயிரத்து 967 கோடி மதிப்பிலான நோட்டுகள் மட்டும் திரும்பப்பெறப்படாமல் உள்ளன. இவ்வாறு அந்த பதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.