பெஞ்சல் புயல் பாதிப்பு: தமிழகத்திற்கு உதவ கேரள அரசு தயார் - பினராயி விஜயன்

பெஞ்சல் புயல் காரணமாக 3 மாவட்டங்களும் வெள்ளத்தில் மிதக்கின்றன.

Update: 2024-12-04 09:39 GMT

திருவனந்தபுரம்,

வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயல், புதுச்சேரி-மரக்காணம் இடையே கரையை கடந்தது. இதன் காரணமாக சென்னை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட வடமாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் கனமழை கொட்டியது. குறிப்பாக கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் புயலின் கோரத்தாண்டவத்தால், அதிகனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் அந்த 3 மாவட்டங்களும் வெள்ளத்தில் மிதக்கின்றன.

மேலும் இந்த புயல் காரணமாக திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை கொட்டியதால், கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கனமழையால் திருவண்ணாமலையில் மண் சரிவு ஏற்பட்டதால், மலையடிவாரத்தில் இருந்த ஒரு வீட்டை மண் மூடியது. அந்த வீட்டில் இருந்த 7 பேர் உயிரோடு புதைந்து பலியானார்கள். இதுவரை இல்லாத அளவிற்கு மழைப்பொழிவு ஏற்பட்டு, மக்களுக்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்திற்கு உதவ கேரள அரசு தயாராக உள்ளது என்று அம்மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளது. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில்,

"பெஞ்சல் புயலால் ஏற்பட்ட பேரழிவில் இருந்து மீண்டு வரும் தமிழக மக்கள் மீதே எங்களது எண்ணங்கள் உள்ளன. இந்த சவாலான நேரத்தில் கேரளா அண்டை மாநிலங்களுடன் ஒற்றுமையாக நிற்கிறது. தேவையான எந்த உதவிகளையும் வழங்க கேரள அரசு தயாராக உள்ளது. ஒன்றாக இணைந்து வென்று வருவோம்" என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்