அரியானா, காஷ்மீரில் ஆட்சியை பிடிப்பது யார்?- இன்று வாக்கு எண்ணிக்கை
அரியானா மற்றும் ஜம்மு காஷ்மீரில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன.;
ஸ்ரீநகர்,
பா.ஜனதா ஆளும் அரியானாவில் கடந்த 5-ந்தேதி சட்டசபை தேர்தல் நடந்தது. மொத்தமுள்ள 90 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நடந்த இந்த தேர்தலில் 67.90 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணி முதல் எண்ணப்படுகின்றன. இதற்காக வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மாநிலத்தில் அடுத்த 5 ஆண்டுகளுக்கான ஆட்சியை மக்கள் யாரிடம் அளித்துள்ளார்கள் என்பது இன்று பிற்பகலுக்குள் தெரிந்து விடும்.
முன்னதாக காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் 90 தொகுதிகளுக்கும் 3 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு இருந்தது. இதில் பதிவான ஓட்டுகளும் இன்று எண்ணப்படுகின்றன.இதற்காக வாக்கு எண்ணும் மையங்களில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. போலீசாருடன், ராணுவமும் இணைந்து பல அடுக்கு பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒருங்கிணைந்த மாநிலமாக இருந்த காஷ்மீரை 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்த பின்னர் நடைபெற்ற முதல் தேர்தல் என்பதால், இதன் முடிவுகள் நாடு முழுவதும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. நாடாளுமன்ற தேர்தலுக்குப்பின் நடைபெற்றுள்ள முதலாவது சட்டசபை தேர்தல்கள் இவை என்பதால் இவற்றின் முடிவுகள் மத்தியில் ஆளும் பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சியினரிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன. இன்று பிற்பகலுக்குள் தேர்தல் முடிவுகள் தெரிந்துவிடும்.