நிரவ் மோடியின் ரூ. 29 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம் - அமலாக்கத்துறை நடவடிக்கை

நிரவ் மோடியின் ரூ. 29 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.;

Update:2024-09-11 22:54 IST

கோப்புப்படம்

புதுடெல்லி,

பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.12,500 கோடிக்கும் கூடுதலாக கடன் வாங்கி விட்டு, அதனை திருப்பி செலுத்துவதற்கு பதிலாக வெளிநாட்டுக்கு தப்பியோடினார் நிரவ் மோடி. 2018-ம் ஆண்டு நாட்டை விட்டு அவர் வெளியேறினார். அதன்பின்பே, அவருக்கு எதிரான மோசடி குற்றச்சாட்டுகள் வெளியுலகிற்கு தெரிய வந்தன. அதே ஆண்டில் பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் நிரவ் மோடி, மெகுல் சோக்சி மற்றும் பலருக்கு எதிராக அமலாக்க துறை வழக்கு பதிந்தது.

இதுபற்றிய விசாரணையின் ஒரு பகுதியாக, பல்வேறு இடங்களில் நடந்த சோதனைகளில் இருந்து வைரம், தங்கம் மற்றும் விலைமதிப்பற்ற கற்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. நிரவ் மோடியை நாடு கடத்தி இந்தியாவுக்கு கொண்டு வரும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். அமலாக்க துறை அதிகாரிகள் கேட்டு கொண்டதற்கேற்ப, அவருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

இதன் பின்னர், லண்டனில் வைத்து 2019-ம் ஆண்டில் இங்கிலாந்து அதிகாரிகள் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரை நாடு கடத்தி இந்தியா கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை சி.பி.ஐ. மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் சட்டவிரோத பணிபரிமாற்ற வழக்கில் நிரவ் மோடியின் வங்கி டெபாசிட்கள், நிலம், கட்டிடம் உள்ளிட்ட ரூ. 29.75 கோடி மதிப்பிலான புதிய சொத்துக்களை பறிமுதல் செய்ய அமலாக்கத்துறை இயக்குனரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்