அதானியிடம் லஞ்சம் வாங்கினேனா? ஜெகன் மோகன் ரெட்டி விளக்கம்
அதானி விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆந்திர அரசு தெரிவித்ததற்கு, ஜெகன் மோகன் ரெட்டி பதில் அளித்துள்ளார்.;
அமராவதி,
கவுதம் அதானியின் சூரிய மின்சக்தி நிறுவனம் தயாரிக்கும் மின்சாரத்தை வினியோகிப்பதற்கான ஒப்பந்தத்தை பெறுவதற்காக ஆந்திரா, ஒடிசா, தமிழ்நாடு, காஷ்மீர், சத்தீஷ்கார் மாநிலங்களில் அரசு அதிகாரிகளுக்கு கவுதம் அதானி ரூ.2 ஆயிரம் கோடிக்கு மேல் லஞ்சம் கொடுத்ததாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. இது இந்திய அரசியலில் புயலை கிளப்பியுள்ளது. எனினும், இந்தக் குற்றச்சாட்டுக்கு அதானி தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.
அதேநேரத்தில், ஆந்திராவிலும் இந்த விவகாரம் பற்றி எரிந்தது. இதுகுறித்து பேசிய ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு,"இந்த விவகாரத்தில் மேலும் பல உண்மைகள் வெளிவரவில்லை. இப்போது உண்மைகள் வெளிவந்து கொண்டிருப்பதால், இதில் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து அரசு யோசித்து வருகிறது. நாங்கள் நிலைமையை ஆய்வுசெய்து, என்ன செய்ய வேண்டும் என்று பார்த்து, அதற்கேற்ப நடவடிக்கை எடுப்போம்" என்றார்.
இந்த நிலையில் முன்னாள் முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி விளக்கமளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: "
கவுதம் அதானி, ஆந்திர அரசில் பல திட்டங்களில் ஒப்பந்தமாகி செயல்பட்டு வருகிறார். அந்த வகையில், ஒரு மாநிலத்தின் முதல் மந்திரியை தொழில்துறை தலைவர்களை சந்திப்பது அசாதாரணமானது அல்ல. நம்பிக்கை மற்றும் அதன் உறவை கட்டியெழுப்புவதற்காக இந்த சந்திப்புகள் நடைபெறுகின்றன. அதானி குற்றச்சாட்டு தொடர்பாக லஞ்சம் பற்றிய எந்த குறிப்புகளும் வரவில்லை. அரசியல் உள்நோக்கம் கொண்ட சில ஊடகங்கள் எனது பெயரைச் சேர்த்து வெளியிடுகின்றன. அவற்றிற்கு 100 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடுக்கப்படும்" என்றார்.