டெல்லி: விற்க கூறிய காரை ஓட்டி விபத்து ஏற்படுத்திய நபர்; தொழிலாளி பலி

டெல்லியில் விபத்து ஏற்படுத்திய கவுதமிடம், ஒரு மாதத்திற்கு முன் காரை கொடுத்து அதனை விற்கும்படி காரின் உரிமையாளர் கூறியுள்ளார்.;

Update:2024-08-18 15:03 IST

ராஜேஷ்

புதுடெல்லி,

டெல்லியின் தெற்கே ஆஷ்ரம் பகுதியருகே ராஜேஷ் (வயது 34) என்பவர் தன்னுடைய சைக்கிளில் வேலைக்கு சென்று கொண்டு இருந்துள்ளார். தோட்ட தொழிலாளியான இவருக்கு பின்னால் இருந்து விரைவாக வந்த மெர்சிடிஸ் ரக கார் ஒன்று திடீரென அவர் மீது மோதியுள்ளது. இந்த சம்பவத்தில் அவர் தூக்கி வீசப்பட்டார்.

விபத்து ஏற்படுத்திய காரை ஓட்டி வந்த நபர், பிரதீப் கவுதம் என அடையாளம் காணப்பட்டு உள்ளார். அவர், சம்பவ பகுதியில் இருந்து உடனே தப்பியோடி விட்டார். இதன்பின், அவர் நேற்று மாலை காவல் நிலையத்திற்கு சென்று சரண் அடைந்து விட்டார்.

இந்த சூழலுக்கு இடையே, காரின் உரிமையாளர் யாரென விசாரிக்கப்பட்டது. இதில், காரின் உரிமையாளர் கவுதமிடம் ஒரு மாதத்திற்கு முன் காரை கொடுத்து அதனை விற்கும்படி கூறியுள்ளார்.

ஆனால், அதனை விற்கிறேன் என கூறி விட்டு, சொந்த உபயோகத்திற்கு கவுதம் பயன்படுத்தி வந்திருக்கிறார். இதில், விரைவாக சென்று விபத்து ஏற்படுத்தியது தெரிய வந்துள்ளது. இந்த விபத்தில் ராஜேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார்.

அவர் உடல் சாலையின் ஓரத்தில் கிடந்தது. அவருடைய சைக்கிள் 150 மீட்டர் தொலைவில் கிடந்துள்ளது. ராஜேஷின் உறவினரான ஹபி பிரசாத் கூறும்போது, ராஜேஷ் வேலைக்கு சென்றபோது மெர்சிடிஸ் கார் பின்னால் இருந்து மோதி விட்டது. இதில், அவரின் உடல் 7 முதல் 8 மீட்டர் வரை இழுத்து செல்லப்பட்டு உள்ளது.

சம்பவ இடத்தில் ராஜேஷ் பலியாகி விட்டார். சைக்கிள் 100 முதல் 150 மீட்டர் தொலைவு வரை இழுத்து செல்லப்பட்டு இருக்கிறது என செய்தியாளர்களிடம் கூறியுள்ளார். ராஜேஷின் பிரேத பரிசோதனை இன்று நடைபெறுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்