டெல்லி: முன்னாள் முதல்-மந்திரி கெஜ்ரிவால் மீது மர்ம திரவம் ஊற்றிய நபர்
டெல்லியில் முன்னாள் முதல்-மந்திரி கெஜ்ரிவால் மீது மர்ம திரவம் ஊற்றிய நபரை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.;
புதுடெல்லி,
தெற்கு டெல்லியின் ஷேக் சராய் பகுதியில் இன்று மாலை கெஜ்ரிவால் பாதயாத்திரை மேற்கொண்டார். அவருடன் டெல்லி மந்திரி மற்றும் கிரேட்டர் கைலாஷ் தொகுதியின் எம்.எல்.ஏ.வான சவுரப் பரத்வாஜ் சென்றார். அப்போது, நபர் ஒருவர் அவரை நோக்கி மர்ம திரவத்தினை ஊற்றியுள்ளார்.
இதனால், கெஜ்ரிவால் அதிர்ச்சி அடைந்து உள்ளார். உடனடியாக அவரின் பாதுகாப்பு அதிகாரிகளும், ஆதரவாளர்களும் அந்த நபரை சூழ்ந்து, பிடித்து கொண்டனர். அவர் அசோக் ஜா என பின்னர் அடையாளம் காணப்பட்டு உள்ளார். அவரை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். கெஜ்ரிவால் மீது 35 நாட்களில் நடத்தப்படும் 3-வது தாக்குதல் இதுவாகும்.
இந்த தாக்குதலை தொடர்ந்து, உடனடியாக பா.ஜ.க. மீது ஆம் ஆத்மி குற்றச்சாட்டு கூறியுள்ளது. அந்த நபர் பா.ஜ.க.வுடன் தொடர்புடைய நபர் ஆவார் என டெல்லி மந்திரி சவுரப் பரத்வாஜ் கூறியுள்ளார். மத்திய அரசின் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. மத்திய அரசு மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷா எதுவும் செய்யவில்லை என குற்றச்சாட்டாக அவர் கூறியுள்ளார்.