டெல்லி தேர்தல்; 27 தலைவர்களை பிரசாரத்திற்கு களமிறக்கும் பா.ஜ.க.
டெல்லி சட்டசபை தேர்தலில், வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் 27 முக்கிய தலைவர்களை பிரசாரத்திற்காக பா.ஜ.க. களமிறக்குகிறது.;
புதுடெல்லி,
70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கான தேர்தல் பிப்ரவரி 5-ந்தேதி நடைபெற உள்ளது. பிப்ரவரி 8-ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தலில், ஆளும் ஆம் ஆத்மி, காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. என 3 முக்கிய கட்சிகள் மும்முனை போட்டியை ஏற்படுத்தி உள்ளன.
இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 10-ந்தேதி தொடங்கியது. 17-ந்தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. 18-ந்தேதி வேட்புமனு பரிசீலனை நடந்தது. 20-ந்தேதி வேட்புமனுக்களை திரும்ப பெற கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. அன்றே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது. டெல்லி சட்டசபை தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர அரசியல் பணியாற்றி வருகிறது.
இதற்காக முக்கிய தலைவர்கள் 27 பேர் கொண்ட குழுவை, பிரசாரத்திற்காக பா.ஜ.க. களமிறக்குகிறது. இந்த குழுவில் மத்திய மந்திரிகள், முன்னாள் மந்திரிகள் மற்றும் கட்சியின் மூத்த தலைவர்கள் என அமைப்பு ரீதியிலான அனுபவம் வாய்ந்தவர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இதன்படி மத்திய மந்திரிகள் பியூஷ் கோயல், தர்மேந்திர பிரதான், புபேந்தர் யாதவ், கஜேந்திர செகாவத், மன்சுக் மாண்டவியா, அனுராக் தாக்கூர், வினோத் தாவ்டே, பிரஜேஷ் பதக், நரோட்டம் மிஷ்ரா மற்றும் பலர் இந்த குழுவில் இடம் பெற்று உள்ளனர்.
பா.ஜ.க. வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்யும் பொறுப்புணர்வுடன், அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் அரசியல் பணிகளை அவர்கள் மேற்கொள்வார்கள். வெற்றியை உறுதி செய்வதற்காக ஒவ்வொரு தலைவருக்கும் 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. மொத்தத்தில் டெல்லி முழுவதும் 54 தொகுதிகளில் வெற்றி பெறும் நோக்கத்துடன் இந்த குழு செயல்படும். இதுதவிர பிற முக்கிய தொகுதிகளில், நாடு முழுவதுமுள்ள பா.ஜ.க.வின் மூத்த தலைவர்கள் பலர் தேர்தல் பணியாற்ற உள்ளனர்.
இந்த தலைவர்கள், உள்ளூர் வேட்பாளர்கள் மற்றும் கட்சி தொண்டர்களுடன் இணைந்து பணியாற்றுவார்கள். தினந்தோறும் தேர்தல் பிரசாரம் சீராக நடைபெறுகிறது என அவர்கள் உறுதி செய்வதுடன், கட்சி கட்டமைப்பில் உள்ள பலவீனங்கள் பற்றியும் பேசுவார்கள். அடிமட்ட அளவில் செயல்பட்டு தேவையான, விரைவான முடிவுகளையும் எடுப்பார்கள். ஒட்டுமொத்த அளவில் தேர்தல் செயல்பாடுகளை மேம்படுத்துவார்கள்.