'இந்திய வரலாற்றிலேயே மிகச்சிறந்த நடுத்தர மக்களுக்கான பட்ஜெட் இதுதான்' - பிரதமர் மோடி
இந்திய வரலாற்றிலேயே மிகச்சிறந்த நடுத்தர மக்களுக்கான பட்ஜெட் இதுதான் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.;

புதுடெல்லி,
நாடாளுமன்றத்தில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், 2025-26ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நேற்று தாக்கல் செய்தார். இந்நிலையில், இந்திய வரலாற்றிலேயே மிகச்சிறந்த நடுத்தர மக்களுக்கான பட்ஜெட் இதுதான் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லி சட்டசபை தேர்தல் வரும் 5-ந்தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி ஈடுபட்டு வருகிறார். இன்று நடைபெற்ற பிரசாரத்தின்போது மத்திய பட்ஜெட் குறித்து பேசிய பிரதமர் மோடி, ஆம் ஆத்மி கட்சியை கடுமையாக விமர்சித்தார். தொடர்ந்து அவர் பேசியதாவது;-
"இந்திய வரலாற்றிலேயே தங்களுக்கு ஏற்ற மிகச்சிறந்த பட்ஜெட் இதுதான் என்று நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த மக்கள் கூறுகின்றனர். மத்திய பட்ஜெட் ஒவ்வொரு குடும்பத்திலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து இதுவரை 12 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுபவர்களுக்கு இதுபோன்ற நிவாரணம் கிடைத்தது இல்லை.
ஆம் ஆத்மி அரசின் தவறான கொள்கைகள் மற்றும் ஊழல் காரணமாக பல நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. ஒருபுறம் ஆம் ஆத்மியின் போலி வாக்குறுதிகளும், மறுபுறம் மோடியின் வாக்குறுதியும் இருக்கிறது. டெல்லி மக்கள் பா.ஜ.க. அரசாங்கத்தை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டனர்.
ஏழைகள், விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் ஆகிய நான்கு தூண்களை வலுப்படுத்துவதில் மத்திய அரசு உறுதியாக இருக்கிறது. மேலும் மோடியின் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான உத்தரவாதமாக மத்திய பட்ஜெட் உள்ளது. சுற்றுலா மற்றும் உற்பத்தி போன்ற வேலைவாய்ப்புகளை உருவாக்கும் துறைகளில் பட்ஜெட் கவனம் செலுத்துகிறது. இது இளைஞர்களுக்கு பயனளிக்கும்.
நாட்டில் உள்ள வாக்காளர்களில் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த மக்கள் கணிசமான அளவில் உள்ளனர். அவர்களின் கனவுகள் மற்றும் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் முடிவுகளை எனது அரசாங்கம் எடுக்கும். பிப்ரவரி 8-ந்தேதி டெல்லியில் பா.ஜ.க. ஆட்சி அமைக்கப்பட்டு, மார்ச் 8-ந்தேதி சர்வதேச மகளிர் தினத்திற்குள் பெண்கள் ரூ 2,500 பெறத் தொடங்குவார்கள் என்பதை எழுதிவைத்துக் கொள்ளுங்கள்.
மக்களுக்கான சுகாதார நடவடிக்கைகள் உள்பட அனைத்து துறைகளிலும் ஆம் ஆத்மி ஊழல் செய்துள்ளது. தங்கள் கட்சி மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர் என்பதை ஆம் ஆத்மி உணர்ந்துள்ளது. இதனால் ஆம் ஆத்மி கட்சியினர் தினந்தோறும் போலி வாக்குறுதிகளை வெளியிட்டு வருகின்றனர்."
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.