மம்தா பானர்ஜிக்கு எதிராக மேற்கு வங்காள கவர்னர் தொடர்ந்த வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
மம்தா பானர்ஜிக்கு எதிராக மேற்கு வங்காள கவர்னர் தொடர்ந்த வழக்கு விசாரணையை கொல்கத்தா ஐகோர்ட்டு ஒத்திவைத்தது.;
கொல்கத்தா,
மேற்கு வங்காளத்தில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி - கவர்னர் ஆனந்த போஸ் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கிடையே கடந்த மாதம் 27ம் தேதி அன்று மாநில செயலகத்தில் நடந்த நிர்வாக கூட்டத்தின் போது ராஜ்பவனுக்கு செல்ல அஞ்சுவதாக பெண்கள் என்னிடம் தெரிவித்திருக்கிறார்கள் என்று மம்தா பானர்ஜி கூறியிருந்தார். இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக மேற்கு வங்காள கவர்னர் சி.வி.ஆனந்த போஸ் கடந்த மாதம் 28ம் தேதி கொல்கத்தா ஐகோர்ட்டில் அம்மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி மற்றும் சில டி.எம்.சி. தலைவர்கள் மீது அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணா ராவ் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கவர்னர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மனுவில் தேவையான மாற்றங்களை சேர்த்து, புதிய விண்ணப்பத்தை தாக்கல் செய்ய அவகாசம் கோரினார். ஆனால் கவர்னருக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் கூறப்படுவதாக அம்மாநில அரசு தரப்பு வழக்கறிஞர் கூறினார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கவர்னர் தரப்பில் வழக்கறிஞர் விண்ணப்பத்தில் தேவையான மாற்றங்களை செய்த பிறகு நாளை இந்த வழக்கு விசாரிக்கப்படும் என உத்தரவிட்டார்.
முன்னதாக, கடந்த மே 2ம் தேதி அன்று ராஜ்பவனின் ஒப்பந்த பெண் ஊழியர் ஒருவர் கவர்னர் மீது பாலியல் புகார் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.