பாலியல் புகார் கொடுத்ததால் சகோதரன், மாமா அடித்துக்கொலை - துக்கத்தில் இளம்பெண் ஆம்புலன்சில் இருந்து குதித்து தற்கொலை
இளம்பெண்ணின் குடும்பத்திற்கு நெருக்கடி அளித்ததுபற்றி போலீசிடம் கூறியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? என திக் விஜய் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.;
போபால்,
மத்திய பிரதேசத்தின் சாகர் நகரில் வசித்து வந்த 20 வயது இளம்பெண் 4 பேருக்கு எதிராக போலீசில் அளித்த பாலியல் துன்புறுத்தல் புகார், அந்த பெண் உள்பட 3 பேரின் மரணத்திற்கு வழிவகுத்துள்ளது.
2019-ம் ஆண்டு 15 வயது சிறுமியாக இருக்கும்போது இளம்பெண் அளித்த அந்த புகாரில், 4 பேரும் துன்புறுத்தல், மிரட்டல் மற்றும் தாக்குதலில் ஈடுபட்டனர் என தெரிவித்து இருக்கிறார். இதன்படி, ஆசாத் தாக்குர், விஷால் தாக்குர், புஷ்பேந்திர தாக்குர் மற்றும் சோட்டு ரெய்க்வார் ஆகிய 4 பேர், தகாத வார்த்தைகளால் பேசி அந்த இளம்பெண்ணை கிண்டல் செய்துள்ளனர். அவரை பாலியல் துன்புறுத்தலும் செய்துள்ளனர்.
இதில், போலீசிடம் புகார் அளிக்க கூடாது என கூறி விஷால் தாக்குர் அந்த சிறுமியை கன்னத்தில் அறைந்து, மிரட்டியுள்ளார். இந்த புகாரை தொடர்ந்து, 4 பேருக்கு எதிராக குற்ற வழக்கு பதிவானது.
2020-ம் ஆண்டு மத்திய பிரதேச சட்டசபை தேர்தலின்போது, இந்த வழக்கானது, ஆளும் பா.ஜ.க. மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் இடையே கடுமையான அரசியல் வாக்குவாதத்தில் ஈடுபட வழிவகை செய்தது.
தேர்தல் முடிந்ததும், குற்றவாளிகளின் குடும்பத்தினர் இளம்பெண்ணிடம் புகாரை வாபஸ் பெற கோரி நெருக்கடி கொடுத்தனர். ஆனால், இளம்பெண் குடும்பத்தினர் மறுத்து விட்டனர். இந்நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்டில், நூற்றுக்கணக்கானோர் திரண்டு வந்து இளம்பெண்ணிடம் புகாரை வாபஸ் பெற கோரி கூறினர்.
அதனை இளம்பெண் மற்றும் அவருடைய தாயார் மறுத்ததும், ஆத்திரமடைந்த அந்த கும்பல் அவர்கள் இருவரையும் அடித்து, தாக்கியது. இதனை பார்த்து, அதிர்ச்சி அடைந்த இளம்பெண்ணின் 18 வயது சகோதரன் நிதின் அஹிர்வார் அவர்களை தடுக்க ஓடி சென்றுள்ளான். எனினும், வீடு புகுந்து தாக்கிய அந்த கும்பல் நிதினை அடித்து கொலை செய்தது.
அப்போது, கும்பலை தடுக்க முயன்ற இந்த இளம்பெண்ணும் கடுமையாக தாக்கப்பட்டார். மகனை பாதுகாக்க ஓடிய அந்த இளம்பெண்ணின் தாயாரையும், கும்பல் கடுமையாக தாக்கியதுடன் அவருடைய ஆடைகளை கிழித்து, நிர்வாணப்படுத்தியது. இந்த சம்பவத்தில், விக்ரம் தாக்குர், விஜய் தாக்குர், ஆசாத் தாக்குர், கோமல் தாக்குர், லாலு கான், இஸ்லாம் கான், கோலு சோனி, நபிஸ் கான் மற்றும் வஹீத் கான் ஆகிய 9 பேருக்கு எதிராக வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கொலை வழக்கு பதிவானது.
2 பேர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து மற்றொரு நீண்டகால சட்ட போராட்டம் தொடங்கியது. இந்நிலையில், கடந்த சனிக்கிழமை இளம்பெண்ணின் மாமாவை பப்பு ரஜக் என்பவர் தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு பேசினார். குற்றவாளிகள் வழக்கை தீர்க்க விரும்புகின்றனர் என கூறியுள்ளார். நிதின் படுகொலையில் சாட்சிகளில் ஒருவரான இளம்பெண்ணின் மாமாவிடம், அவர் அளித்த வாக்குமூலங்களை வாபஸ் பெறும்படி கூறப்பட்டு உள்ளது. இதற்கு அவர் மறுப்பு தெரிவித்து விட்டார்.
இதில், இரண்டு பேருக்கு இடையே மோதல் ஏற்பட்டு இருவரும் படுகாயமடைந்தனர். எனினும், சிகிச்சை பலனின்றி இளம்பெண்ணின் மாமா உயிரிழந்து விட்டார். பப்புவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுபற்றி அவருடைய குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் ஆசிக் குரேஷி, பப்லு பீனா, இஸ்ரேல் பீனா, பஹீம் கான் மற்றும் தன்டு குரேஷி ஆகிய 5 பேருக்கு எதிராக கொலை வழக்கு பதிவானது. அவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
ஆனால், இதனுடன் சம்பவம் முடியவில்லை. இளம்பெண்ணின் மாமாவின் உடலை ஆம்புலன்ஸ் வேனில் ஏற்றி கொண்டு நேற்று மாலை வீட்டுக்கு சென்றனர். அப்போது, வேனில் இருந்த அந்த இளம்பெண் துக்கத்துடன் அழுதபடி இருந்துள்ளார். வீடு வருவதற்கு 20 கி.மீ. தொலைவு இருக்கும்போது, திடீரென வேனின் கதவை திறந்து வெளியே குதித்து விட்டார். இதில், படுகாயமடைந்த அந்த இளம்பெண் உயிரிழந்து விட்டார். இதுபற்றி கூடுதல் போலீஸ் சூப்பிரெண்டு லோகேஷ் சின்ஹா கூறும்போது, இரு தரப்பினர் மோதலில் படுகாயமடைந்த இளம்பெண்ணின் மாமா உயிரிழந்து விட்டார்.
இதுபற்றி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறோம். இதன்பின் இறுதி சடங்கிற்கான வேனில் இருந்து குதித்து இளம்பெண் மரணம் அடைந்து விட்டார். விசாரணைக்கு பின்னரே அனைத்து உண்மைகளும் தெரிய வரும் என்று கூறியுள்ளார்.
மத்திய பிரதேசத்தில் முதல்-மந்திரி மோகன் யாதவ் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில், இளம்பெண்ணின் மரணம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரசின் முக்கிய தலைவர்களான ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் மோடி அரசின் செயல்பாட்டை விமர்சித்து பேசியுள்ளனர்.
குடும்பத்திற்கு நெருக்கடி அளித்ததுபற்றி போலீசில் இளம்பெண் எச்சரித்து இருந்தும் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? என காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான திக் விஜய் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதேபோன்று, மத்திய பிரதேச காங்கிரஸ் தலைவர் ஜித்து பத்வாரி, இந்த வழக்கில் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இந்த அமளிக்கு இடையே முதல்-மந்திரி மோகன் யாதவ், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்திக்க நேரில் செல்ல உள்ளார் என கூறப்படுகிறது.