கொல்கத்தா சென்ற இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து, விமானம் அவசரமாக ராய்ப்பூர் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
ராய்ப்பூர்,
நாடு முழுவதும் ஆங்காங்கே விமானங்களில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் புறப்பட வேண்டிய விமானங்கள் விமான நிலையங்களிலேயே நிறுத்தப்பட்டும், பறந்து செல்லும் விமானங்கள் திட்டமிடப்படாத விமான நிலையங்களில் இறங்கிய பின்னர் தீவிர சோதனையும் நடத்தப்படுகின்றன. இதில் வெடிகுண்டு வைக்கப்படவில்லை என்பது கண்டறியப்பட்டு, அதன் பின்னர் விமானங்கள் தாமதமாக புறப்பட்டு செல்கின்றன.
இந்த நிலையில், மராட்டிய மாநிலம் நாக்பூரில் இருந்து கொல்கத்தா நோக்கி இண்டிகோ விமானம் ஒன்று இன்று காலை புறப்பட்டது. விமானத்தில் 187 பயணிகள் இருந்தனர். விமானம் சென்றுகொண்டிருந்த நேரத்தில் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக விமான நிலைய அதிகாரிகளுக்கு சமூக வலைதளம் மூலம் மிரட்டல் வந்தது.
இதையடுத்து விமானம் அவசரமாக அருகில் இருந்த ராய்ப்பூர் விமான நிலையத்தில் காலை 9 மணியளவில் தரையிறக்கப்பட்டது. தொடர்ந்து விமானத்தை தொழில்நுட்ப பணியாளர்கள் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் முழுமையாக சோதனை நடத்தினர். வெடிகுண்டு மிரட்டல் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.