மராட்டியத்தில் மீண்டும் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி: அடுத்த முதல்-மந்திரி யார்..? ஏக்நாத் ஷிண்டே பதில்

பா.ஜ.க. தலைமையிலான ஆளும் மகாயுதி கூட்டணி பெரும்பான்மைக்கு அதிகமான இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது

Update: 2024-11-23 06:58 GMT

தானே,

மராட்டியத்தில் மொத்தமுள்ள 288 தொகுதிகளுக்கும் கடந்த 20ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் ஆளும் பாஜக, சிவசேனா ( முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தரப்பு), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார் தரப்பு) இணைந்து மகாயுதி கூட்டணியும், காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் தாக்கரே தரப்பு) தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் தரப்பு) இணைந்து மகாவிகாஸ் அகாடி கூட்டணியும் களமிறங்கின.

ஓரேகட்டமாக நடந்த தேர்தலில் 4 ஆயிரத்து 131 வேட்பாளர்கள் களமிறங்கினர். இதில், 66.05 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்த சூழலில் மராட்டிய மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் பா.ஜ.க. தலைமையிலான ஆளும் மகாயுதி கூட்டணி பெரும்பான்மைக்கு அதிகமான இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. இதன்படி 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பா.ஜ.க. கூட்டணி முன்னிலையில் உள்ளது. மராட்டிய மாநிலத்தில் ஆட்சி அமைக்க தேவைப்படும் பெரும்பான்மைக்கான இடங்கள் 145 ஆகும்.

இந்நிலையில் மகாயுதி கூட்டணி மாநிலத்தில் ஆட்சி அமைக்க உள்ள நிலையில், செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மராட்டிய முதல்-மந்திரியும், சிவசேனா தலைவருமான ஏக்நாத் ஷிண்டே, "மராட்டிய வாக்காளர்களுக்கு எனது நன்றிகள். இது மாபெரும் வெற்றி. மகாயுதி அமோக வெற்றி பெறும் என்று முன்பே கூறியிருந்தேன். அனைவருக்கும் நன்றி. சமுதாயத்தின் அனைத்து பிரிவினருக்கும் நான் மகாயுதி கட்சியின் சார்பில் நன்றி கூறுகிறேன்.

மராட்டியத்தின் அடுத்த முதல்-மந்திரி யார் என்பது இதுவரை முடிவாகவில்லை. கூட்டணி கட்சியில் உள்ள மூத்த தலைவர்கள் பேசி அடுத்த முதல்-மந்திரியை முடிவு செய்வார்கள்" என்று அவர் தெரிவித்தார்.

தற்போதைய முன்னிலை நிலவரம்:-

பா.ஜனதா கூட்டணி - 221

காங்கிரஸ் கூட்டணி - 57

பிற கட்சிகள் - 10

Tags:    

மேலும் செய்திகள்