போபால்: 377 டன் விஷ வாயு கழிவுகள் 40 ஆண்டுகளுக்கு பின்பு வேறிடத்திற்கு மாற்றம்

போபால் விஷ வாயு கழிவுகளை நீக்காததற்கு கண்டனம் தெரிவித்த மத்திய பிரதேச ஐகோர்ட்டு, கழிவுகளை வேறிடத்திற்கு கொண்டு செல்ல 4 வார கால அவகாசம் அளித்துள்ளது.;

Update: 2025-01-02 10:14 GMT

போபால்,

மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் யூனியன் கார்பைடு தொழிற்சாலை அமைந்துள்ளது. இதில், 40 ஆண்டுகளுக்கு முன் விஷ வாயு கசிவு ஏற்பட்டது. 1984-ம் ஆண்டு டிசம்பர் 2 மற்றும் 3 ஆகிய நாட்களுக்கு இடைப்பட்ட இரவில் மெத்தில் ஐசோ சயனேட் என்ற வாயு கசிந்ததில் 5,479 பேர் வரை உயிரிழந்தனர்.

ஆயிரக்கணக்கானோர் தீவிர மற்றும் நீண்டகால சுகாதார பாதிப்புகளுக்கு ஆளானார்கள். இந்த சூழலில், கடந்த டிசம்பர் 3-ந்தேதி மத்திய பிரதேச ஐகோர்ட்டு வெளியிட்ட செய்தியில், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு பின்னரும் போபாலில் யூனியன் கார்பைடு ஆலை ஏன் இன்னும் சுத்தம் செய்யப்படாமல் உள்ளது? என அதிகாரிகளை கடிந்து கொண்டது.

சம்பவம் நடந்து 40 ஆண்டுகள் ஆன பின்னரும், அதிகாரிகள் மந்த நிலையிலேயே உள்ளனர் என கூறியதுடன், கழிவுகளை வேறிடத்திற்கு கொண்டு செல்ல 4 வார கால அவகாசம் அளித்துள்ளது.

கழிவுகளை அகற்றும் பணி தொடங்கியது

இந்த நிலையில், போபாலில் உள்ள ஆலையில் இருந்து தார் மாவட்டத்தில் உள்ள பீதாம்பூர் தொழிற்பேட்டை பகுதிக்கு ஆலை கழிவுகளை கொண்டு செல்வது என முடிவானது. இதற்காக, கடந்த ஞாயிற்று கிழமையில் இருந்து ஏறக்குறைய 100 பேர் பணியில் ஈடுபட்டனர்.

12 சீலிடப்பட்ட கன்டெய்னர் லாரிகளில் கழிவுகள் ஏற்றப்பட்டு பசுமை வழித்தடம் வழியே நேற்றிரவு 9 மணியளவில் போக்குவரத்து தொடங்கியது.

இந்த கழிவுகளை ஏற்றிய வாகனங்கள் 7 மணிநேர பயணத்திற்கு பின்னர், ஆலையில் இருந்து 250 கி.மீ. தொலைவிலுள்ள பீதாம்பூர் தொழிற்பேட்டையை சென்றடைந்தன. இதில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு 30 நிமிடங்களுக்கு ஒரு முறை ஓய்வு கொடுக்கப்பட்டது. அவர்களுக்கு அவ்வப்போது சுகாதார பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.

அடுத்த நடவடிக்கை என்ன?

தொடக்கத்தில், சில கழிவுகள் பீதாம்பூரில் உள்ள செயலிழப்பு பிரிவில் வைத்து எரிக்கப்படும். இதன்பின்னர் அதில் இருந்து கிடைக்கும் சாம்பல் பரிசோதனைக்கு கொண்டு செல்லப்படும். அதில் ஏதேனும் தீங்கு ஏற்படுத்தும் தனிமங்கள் உள்ளனவா? என பரிசோதிக்கப்படும்.

கழிவுகளை எரிக்கும்போது உண்டாகும் புகையானது, சிறப்பு 4 வழி அடுக்குகளை கொண்ட வடிகட்டிகள் வழியே செலுத்தப்படும். இதனால், காற்று மாசு ஏற்படாமல் பார்த்து கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

விஷ தனிமங்கள் எதுவும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட பின்னர், சாம்பலானது 2 அடுக்கு சவ்வு உதவியுடன் மூடப்பட்டு, அவை எந்த வழியிலும் மண்ணுடனோ அல்லது நீருடனோ தொடர்பில் இருக்காது என்பதும் உறுதி செய்யப்படும் என தார் போலீஸ் சூப்பிரெண்டு மனோஜ் சிங் கூறியுள்ளார்.

பொதுமக்கள் எதிர்ப்பு

2015-ம் ஆண்டு இதேபோன்று, யூனியன் கார்பைடின் 10 டன்கள் கழிவுகள் பரிசோதனை அடிப்படையில், எரிக்கப்பட்டபோது, மண், நிலத்தடி நீர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள நீர்நிலைகள் மாசடைந்தன என்று அந்த பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டாக தெரிவித்தனர்.

எனினும், இதனை நிராகரித்துள்ள சிங், 2015-ம் ஆண்டு பரிசோதனை அறிவிப்புகளின் முடிவிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என தெரிவித்ததுடன், அனைத்து விசயங்களும் பரிசோதிக்கப்பட்டன. அதனால், கவலைப்பட எந்த விசயமும் இல்லை என்று கூறினார்.

1.75 லட்சம் மக்கள் தொகையை கொண்ட பீதாம்பூர் நகரத்தில் உள்ள பலர் கழிவுகளை செயலிழப்பு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஞாயிற்று கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்