மணிப்பூரில் கொடூரம்: ஆசிரியை பலாத்காரம், உயிருடன் எரித்து கொலை; மர்ம கும்பல் வெறியாட்டம்

மணிப்பூரில் ஆயுதம் ஏந்திய மர்ம நபர்கள் நேற்றிரவு ஊருக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர். இதில் பலருடைய வீடுகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன.

Update: 2024-11-08 18:07 GMT

கவுகாத்தி,

மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதத்தில் மெய்தி மற்றும் குகி என இரு குழுவினருக்கு இடையே மோதல் வெடித்தது. இது வன்முறையாக பரவியதில் இரு தரப்பிலும் 240 பேர் கொல்லப்பட்டனர். வன்முறையை தொடர்ந்து, 60 ஆயிரம் பேர் வேறு இடங்களுக்கு புலம்பெயர்ந்து சென்றனர். இதனை தொடர்ந்து, ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு படையினர் பெருமளவில் குவிக்கப்பட்டு உள்ளனர்.

எனினும், ஏறக்குறைய 18 மாதங்களாக இந்த பகுதியில் இரு குழுவினருக்கும் இடையே மோதல்கள் நடைபெறுவதும், பின்னர் அமைதி ஏற்படுவதும் காணப்படுகிறது. இந்த நிலையில், மோதலால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில், ஜிரிபாம் மாவட்டத்தில் ஆயுதம் ஏந்திய மர்ம நபர்கள் சிலர் நேற்றிரவு ஊருக்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர். இதில் பலருடைய வீடுகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. துப்பாக்கி சூடும் நடத்தப்பட்டது.

அந்த பகுதியில் குகி-ஜோ சமூகத்துடன் தொடர்புடைய மார் பழங்குடி சமூகத்தினர் அதிகம் வசிக்கின்றனர். இதில் மார் சமூக பெண்ணான ஜொசாங்கிம் (வயது 31) என்பவரின் உடல் நேற்றிரவு கண்டெடுக்கப்பட்டது. இந்த வன்முறையில் உயிரிழந்த ஜொசாங்கிம் அந்த பகுதியில் உள்ள ஹெர்மோன் டியூ ஆங்கில ஜூனியர் உயர்நிலை பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்திருக்கிறார். இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

இதுபற்றி அவருடைய கணவர் குர்தன்சாங் போலீசில் புகார் அளித்துள்ளார். அதில், ஆயுதங்களுடன் வந்த மெய்தி பயங்கரவாத குழுவை சேர்ந்த சிலர், அவருடைய மனைவியை பாலியல் பலாத்காரம் செய்து, நேற்றிரவு 9 மணியளவில் உயிருடன் தீ வைத்து கொளுத்தி விட்டனர். அவர்களுடைய வீட்டில் வைத்து நடந்த இந்த சம்பவத்திற்கு பின்னர், அந்த குழுவினர், வீட்டில் இருந்த பொருட்களை கொள்ளையடித்து விட்டு, தீ வைத்து கொளுத்தி விட்டு சென்றது என எப்.ஐ.ஆரில் தெரிவித்து உள்ளார். மர்ம கும்பல், வீட்டுக்கு தீ வைத்து தப்பி செல்லும் வீடியோ ஒன்றும் வெளிவந்து உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்