புதுச்சேரியில் மீட்புப் பணிக்கு ராணுவம் அழைப்பு - மாவட்ட கலெக்டர் தகவல்

புதுச்சேரியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-12-01 02:45 GMT

புதுச்சேரி,

வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று முன்தினம் பிற்பகல் 2.30 மணிக்கு புயலாக வலுப்பெற்றது என அறிவிக்கப்பட்டது. இந்த புயலுக்கு 'பெஞ்சல்' எனவும் பெயர் சூட்டப்பட்டது. இந்த 'பெஞ்சல்' புயல் மேற்கு-வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து நேற்று மாலைக்குள் சென்னை-புதுச்சேரிக்கு இடையே, மாமல்லபுரம்-புதுச்சேரி இடைப்பட்ட பகுதியை மையமாகக் கொண்டு கரையை கடக்கும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இதன்படி நேற்று இரவு 10.30 மணி முதல் 11.30 மணிக்குள் முழுமையாக கரையக் கடந்த விட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. புயல் கரையைக் கடந்தபோது அதிகபட்சமாக மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசியதாகவும், வட மாவட்டங்களில் சூறைக்காற்று வீசியது என்றும் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில் மேற்கு-தென் மேற்கில் 7 கி.மீ. வேகத்தில் பயணிக்கும் பெஞ்சல் புயல், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது.

இதனிடையே பெஞ்சல் புயல் கடந்த 3 மணி நேரமாக நகராமல் புதுச்சேரி அருகிலேயே நிலை கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் பெஞ்சல் புயல் மேற்கு- தென் மேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும். அடுத்த சில மணி நேரத்தில் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என்றும் பாலச்சந்திரன் தெரிவித்திருந்தார்.

புதுச்சேரியில் அதிகாலை 3 மணி முதல் கனமழை பெய்து வரும் நிலையில் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கால்வாயில் உள்ள அடைப்புகளால் மழை வெள்ளம் தேங்கி பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் நகரில் நூற்றுக்கணக்கான மரங்கள் சாலையில் ஆங்காங்கே விழுந்துள்ளன.

இந்நிலையில் புதுச்சேரியில் மீட்புப் பணிக்கு ராணுவம் அழைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மேலும் அவர் கூறுகையில், "புதுச்சேரியில் மீட்புப் பணிக்காக ராணுவத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வீடுகளுக்குள் மழைநீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் மீட்புப் பணி தொய்வு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. மக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம். தேவைக்கு உதவி எண்களை அழைக்கலாம். கனமழை பெய்து வரும் நிலையில் புதுச்சேரியில் இன்று திரையரங்குகளில் அனைத்து காட்சிகளும் ரத்து செய்யப்படுகிறது" என்று அவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்