ஜீப்களில் சாகச பயணம்: மலை உச்சியில் சிக்கி தவித்த 40 சுற்றுலா பயணிகள் மீட்பு
இடுக்கி மாவட்டம் முழுவதும் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது.
இடுக்கி,
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே ராமக்கல்மேட்டு என்ற சுற்றுலாதலம் உள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள், நான்கு மலை வியூ பாயிண்ட் என்னும் இயற்கை எழில் நிறைந்த பகுதிக்கு செல்ல அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். நெடுங்கண்டம் தூக்குப்பாலம் பகுதியில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த மலைப்பகுதி உள்ளது. இங்கு காலையில் சூரியனின் உதயத்தையும், மாலையில் அஸ்தமிப்பதையும் பார்ப்பதற்காக ராமக்கல்மெட்டு மலை உச்சிக்கு சுற்றுலா பயணிகள் செல்வது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் தமிழகம், கர்நாடக மாநிலங்களை சேர்ந்த 40 சுற்றுலா பயணிகளை 22 ஜீப்களில் நான்கு மலை வியூ பாயிண்ட் மலை உச்சி பகுதிக்கு டிரைவர்கள் சாகச பயணம் அழைத்து சென்றனர். கரடுமுரடான மலைப்பாதை வழியாக மலை உச்சிக்கு ஜீப்கள் சென்றன. மேகமூட்டங்கள் தவழ்ந்து சென்ற காட்சியையும், பனிமூட்டம் சூழ்ந்திருந்த மலைப்பகுதியையும் சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.
இதற்கிடையே இடுக்கி மாவட்டம் முழுவதும் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. அதன்படி ராமக்கல்மெட்டு மலை உச்சியில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் மலைப்பாதை வழியாக, சுற்றுலா பயணிகள் சென்ற ஜீப்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் சுற்றுலா பயணிகளும், ஜீப் டிரைவர்களும் மீண்டும் திரும்பி வரமுடியாமல் மலை உச்சியில் உள்ள வனப்பகுதியில் சிக்கி தவித்தனர். இதை அறிந்த அப்பகுதியை சேர்ந்த மலைக்கிராம மக்கள் அங்கு சென்றனர்.
இதேபோல் வருவாய்த்துறையினரும், போலீசாரும் மலை உச்சிக்கு விரைந்தனர். பின்னர் அங்கு சிக்கி தவித்த 40 சுற்றுலா பயணிகள், 22 ஜீப் டிரைவர்களை பத்திரமாக மீட்டு ராமக்கல்மெட்டு பகுதிக்கு அழைத்து வந்தனர்.
இந்தநிலையில் சுற்றுலா பயணிகளை மலை உச்சிக்கு சாகச பயணத்துக்கு அழைத்து சென்ற 22 ஜீப் டிரைவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இடுக்கி மாவட்ட கலெக்டர் ஷீபா ஜார்ஜ் உத்தரவிட்டார். அதன்பேரில் தடை செய்யப்பட்ட பகுதியில் டிரக்கிங் நடத்திய ஜீப் டிரைவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் 22 ஜீப்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி, நான்கு மலை வியூ பாயிண்ட் மலைப்பகுதியில் டிரக்கிங் நடத்த கடந்த 2005-ம் ஆண்டு அரசு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த தடை உத்தரவு அமலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.